ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா- பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டம்
- வேட்டி சட்டை அணிந்தபடி ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டு பொங்கலிட்டனர்.
- மதுரை கிராமிய கலைகள் மையம் சார்பாக பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
சென்னை:
தமிழக ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதற்காக ஆளுநர் மாளிகை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மிகப்பெரிய பானையில் பொங்கல் பொங்குவது போன்றும், அதன் அருகில் மாட்டு வண்டி மற்றும் வைக்கோல் போர் வைக்கப்பட்டு நமது பராம்பரியத்தை பறைசாற்றியது.
3 மண்பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. வேட்டி சட்டை அணிந்தபடி ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டு பொங்கலிட்டனர். பானையில் அரிசி, வெல்லம் போட்டு அதனை கரும்பு மூலம் கிளறி பொங்கல் வைத்தனர்.
பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதற்காக அரங்கத்திற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒவ்வொருவரின் இருக்கைக்கும் சென்று கையெடுத்து கும்பிட்டு பொங்கல் வாழ்த்துகள் என்று தமிழில் கூறினார்.
அதனைத்தொடர்ந்து மதுரை கிராமிய கலைகள் மையம் சார்பாக பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன. முதலில் நாதஸ்வரம் நிகழ்ச்சியும், தொடர்ந்து காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், நாட்டுப்புற பாடல், கரகாட்டம், காளியாட்டம், பெரிய மேளம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இறுதியாக சோழர்களின் காலத்தில் இசைக்கப்பட்ட வாத்திய கருவிகளுடன் கைலாய வாத்தியம் நடந்தது.
அதன்பின்னர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் இரவு விருந்து அளிக்கப்பட்டது.