தமிழக மக்களை தவறான பாதைக்கு தி.மு.க.வினர் திசை திருப்புகின்றனர்- பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா
- மோடி கூட்டாட்சி முறையின் வழிமுறைகளை மிகவும் நம்புகிறார்.
- கூட்டாட்சிக்கு ஒத்துழைக்கும் வகையில் தமிழக அரசு செயல்படவில்லை.
காரைக்குடியில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
தமிழகம், பிரதமரின் இதயத்தில் இடம் பெற்றுள்ள மாநிலமாகும். மோடி கூட்டாட்சி முறையின் வழிமுறைகளை மிகவும் நம்புகிறார். தமிழக அரசு கூட்டாட்சி முறைக்கு ஒத்துழைப்பு என்ற அடிப்படையில் செயல்படவில்லை. தமிழகத்தில் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. அதைப்பற்றி தி.மு.க. கவலைப்படவே இல்லை.
எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறுவதையே தி.மு.க. வழக்கமாக கொண்டுள்ளது, தமிழக மக்களை தவறான பாதைக்கு தி.மு.க.வினர் திசை திருப்புகின்றனர். ஊழலை சட்டப்பூர்வமாக்குகிறார்கள். நாங்கள் நாட்டின் வளர்ச்சியில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
தி.மு.க. வாரிசு அரசியல் மட்டும் செய்கிறது. இவர்களது மொத்த கலாசாரமும் குடும்ப அரசியலை மையப்படுத்தியே உள்ளது. டி என்பது வம்சத்தையும், எம் என்பது பண மோசடியையும், கே என்பது கட்ட பஞ்சாயத்தையும் குறிக்கிறது.
சிவகங்கை பல ஆண்டுகளாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ள பகுதி. ஆனால் மிகவும் பின்தங்கி உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். எய்ம்ஸ் தொடர்பான முழுமையான கருத்துகளை அண்ணாமலை பிறகு தெரிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.