திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
- மெயில் அனுப்பியவர்கள் குறித்து விசாரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
- அனைத்து விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு தினமும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் திருச்சி விமான நிலையம் பயணிகளின் கூட்டத்தால் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என விமான நிலைய இயக்குனர் மெயிலுக்கு தகவல் வந்ததை தொடர்ந்து தமிழக போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வெடிகுண்டு சோதனை பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் இறுதியில் அந்த செய்தி புரளி என தெரிய வந்தது
இந்த நிலையில் இன்று காலை 10:35 மணி அளவில் திருச்சி விமான நிலைய இயக்குனரின் இமெயிலிற்கு திருச்சி விமான நிலையத்தின் கழிவறையில் வெடி கொண்டு வைத்திருப்பதாகவும் அது விரைவில் வெடிக்கும் எனவும் தகவல் அனுப்பப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழக போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு சோதனை பிரிவினர் மற்றும் மோப்பநாய் பிரிவினர் உள்ளிட்டோர் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர். மெயில் அனுப்பியவர்கள் குறித்து விசாரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக திருச்சி விமான நிலையம் மற்றும் அனைத்து விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.