உள்ளூர் செய்திகள்

ரெட்டியார்சத்திரம் அருகே சிறுமிகளை சப்த கன்னிகளாக பாவித்து பக்தர்கள் வழிபாடு

Published On 2024-12-16 10:27 IST   |   Update On 2024-12-16 10:27:00 IST
  • ஐயப்ப பக்தர்கள் 200-க்கும் மேற்ப்பட்டோர் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.
  • சப்த கன்னிமார் தெய்வங்களாக பாவித்து வழிபாடு நடத்தினார்கள்.

இடையகோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள பலக்கனூத்தில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதம் இருந்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

இதையொட்டி அதே ஊரைச் சேர்ந்த 7 வயது முதல் 10 வயது வரை உள்ள 7 சிறுமிகளை தேர்வு செய்து அவர்களை சப்த கன்னிமார் தெய்வங்களாக பாவித்து வழிபாடு நடத்தினார்கள்.

கடந்த 7 நாட்களுக்கு முன்பு சப்தகன்னிகளாக 7 சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை சப்தகன்னிமார் தெய்வங்களாக பாவிக்கப்பட்டு, மஞ்சள் உடை அணிவித்து கையில் காப்பு கட்டி நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

பின்னர் சிறுமிகள் கோவிலில் தங்க வைக்கப்பட்டு சுவாமிகளுக்கு பூஜை நடத்துவது போன்று அவர்களுக்கு காலை, மாலை நேரங்களில் சிறப்பு ஆராதனை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் விழாவின் 7ம் நாளான நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஊர் எல்லையில் இருந்து சப்த கன்னிகளான 7 சிறுமிகளை நெய் விளக்கு ஏந்தி மேள தாளம் முழுங்க ஊர்வலமாக முக்கிய வீதியின் வழியாக மாரியம்மன் கோவிலுக்கு அழைத்துவரப்பட்டது.

அதை தொடர்ந்து பூக்குழி இறங்குவதற்காக ஆழி வளர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் இரவு சப்த கன்னிமார்கள் 7 சிறுமிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு குருசாமிகள் வீரப்பன், ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் ஐயப்ப பக்தர்கள் 200-க்கும் மேற்ப்பட்டோர் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது சுவாமி ஐயப்பன் பஜனை பாடல்களை பாடியபடி பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பத்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி, திண்டுக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏரளமான ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News