பெண்கள் மட்டுமே நிர்வகித்து வரும் கோவிலில் 2 ஆயிரம் பேருக்கு அசைவ அன்னதான விருந்து
- முனீஸ்வரன் கோவிலில் முனீஸ்வரன், முனியம்மாள் என இரண்டு தெய்வங்கள் உள்ளன.
- பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 20-க்கும் மேற்பட்ட கிடாய்கள் 50-க்கும் மேற்பட்ட கோழிகள் வெட்டப்பட்டன.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் சோழவந்தான் ரோடு மொக்கையன் அம்பலம் நகரில் முனீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை பெண் பக்தர்களே பராமரித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் வரும் அமாவசையன்று இங்கு கிடாவெட்டு மற்றும் அசைவ அன்னதானம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
நேற்று தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலை கோவிலில் சர்க்கரை பொங்கல் வைத்து சுவாமிக்கு படைக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக கோவிலுக்கு செலுத்திய ஆட்டு கிடாய்கள் மற்றும் சேவல்கள் முனீஸ்வரனுக்கு பலியிடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அப்போது ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் சாமியாடினர். முதலில் சக்தி கிடாயும், பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 20-க்கும் மேற்பட்ட கிடாய்கள் 50-க்கும் மேற்பட்ட கோழிகள் வெட்டப்பட்டன. அவற்றை கொண்டு அசைவ அன்னதானம் தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் முன்பு வரிசையில் பக்தர்கள் அமரவைக்கப்பட்டு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது.
இது குறித்து பக்தர்கள் கூறுகையில், மொக்கையன் அம்பலம் நகரில் எழுந்தருளியுள்ள முனீஸ்வரன் கோவிலில் முனீஸ்வரன், முனியம்மாள் என இரண்டு தெய்வங்கள் உள்ளன. பெண்களே இந்த கோவிலை நிர்வகித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தை அமாவசையன்று முனீஸ்வரன், முனியம்மாள் ஆகியோருக்கு படையல் வைத்து கிடாய் வெட்டி பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். இதே போல் இந்தாண்டு இந்த திருவிழா நேற்று நடைபெற்றது.
திருமங்கலம் நகர் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நினைத்த காரியத்தை வேண்டி வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை சுவாமிகளுக்கு செலுத்திய ஆடுகள் மற்றும் கோழிகளை வைத்து முதலில் சாமிக்கு படைத்த பின்பு திருமங்கலம், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதியிலிருந்து வந்த பக்தர்களுக்கு அசைவ உணவு விருந்து அளிக்கப்பட்டது.
பெண்கள் மட்டுமே முனீஸ்வரர் கோவிலில் நிர்வாகித்து வரும் இந்த அசைவ திருவிழா அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.