தமிழ்நாடு

109 கி.மீட்டருக்கு அகலப்படுத்தப்பட்ட செய்யூர்-வந்தவாசி-போளூர் சாலை: முதலமைச்சர் திறந்து வைத்தார்

Published On 2025-02-20 14:34 IST   |   Update On 2025-02-20 14:43:00 IST
  • சாலையின் இருபுறங்களில் 47,700 மரக்கன்றுகள் நடப்பட்டு நன்கு பராமரிக்கப்படுகிறது.
  • 3 ஊர்களுக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளதால், கனரக வாகனங்கள் போக்குவரத்து நெரிசலும், பயண நேரமும் குறையும்.

சென்னை:

சென்னை - கன்னியாகுமரி தொழில்தடத் திட்டத்தின் கீழ், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன், நில எடுப்பு, பிற துறை சார்ந்த குழாய்களை மாற்றியமைத்தல் மற்றும் பராமரிப்பு செலவினம் உட்பட 1141 கோடியே 23 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், 109 கிலோ மீட்டர் நீளத்திற்கு 10 மீட்டர் சாலையாக அகலப்படுத்தப்பட்டு, சாலை பாதுகாப்பு அம்சங்களுடன் தரம் உயர்த்தப்பட்ட செய்யூர்-பனையூர் இணைப்புச் சாலை உள்ளிட்ட செய்யூர்–வந்தவாசி-போளூர் சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலியில் திறந்து வைத்தார்.

இத்திட்டத்தில், மருதாடு, வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஆகிய 3 ஊர்களுக்கு புறவழிச் சாலைகள், மழை நீர் வடிகால்கள், 5 உயர்மட்ட பாலங்கள், 14 சிறு பாலங்கள், 225 குறு பாலங்கள், சாலைப் பாதுகாப்பினை உறுதிசெய்ய தெருவிளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக கழிப்பறை வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையின் இருபுறங்களில் 47,700 மரக்கன்றுகள் நடப்பட்டு நன்கு பராமரிக்கப்படுகிறது.

இந்த சாலையானது, கிழக்கு கடற்கரைச் சாலை, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் விழுப்புரம்-மங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கின்றது.

இத்திட்டத்தில் மருதாடு, வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஆகிய 3 ஊர்களுக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளதால், கனரக வாகனங்கள் போக்குவரத்து நெரிசலும், பயண நேரமும் குறையும். நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் ரூ.92.45 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 6 வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்கள், 11 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், 4 மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும் ரூ.10.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள 6 கூடுதல் வட்ட செயல்முறை கிடங்குகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

Tags:    

Similar News