இந்தி திணிப்பு: எது தேவை என்று முடிவு செய்யும் அறிவு தமிழனுக்கு உண்டு- கமல்ஹாசன்
- மநீம கட்சிக் கொடியை ஏற்றி வைத்த அவர் பின்னர் தொண்டர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசினார்.
- நான் என்ன மொழியில் படிக்க வேண்டும் என்பதை யாரும் சொல்லக் கூடாது.
அங்கு கட்சிக் கொடியை ஏற்றி வைத்த அவர் பின்னர் தொண்டர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசினார்.
அப்போது, மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை தொடர்பாக கருத்து தெரிவித்தார்.
இதுகுறித்து கமல்ஹாசன் கூறியதாவது:-
வானுயர்ந்த தமிழ் மொழியை எவராலும் கீழே இறக்கிவிட முடியாது.
இந்தியை திணிக்க முயன்றவர்களை தடுத்தவர்கள் இன்று நரைத்த தாடியுடன் கூட்டத்தில் இங்கே நின்று கொண்டு இருப்பார்கள். மொழிக்காக உயிரையே தமிழகத்தில் விட்டுள்ளனர்.
பச்சைக்குழந்தைக்கு என்ன வேண்டும் என்று தெரியும். தமிழனுக்கு தெரியாதா? என்ன மொழி வேண்டும், வேண்டாம் என்று. எது தேவை என்று முடிவு செய்யும் அறிவு தமிழனுக்கு உண்டு.
மாணவர்களுக்கு என்ன இஷ்டமோ அதை தான் கற்றுக் கொடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு, நான் சொல்வதை கற்றுக் கொள்ளவில்லை என்றால் கைச்செலவுக்கு காசு கொடுக்க மாட்டேன் என்று சொல்லும் அரசு எந்த நிலைக்கு தள்ளப்படும் என்பதை சரித்திரம் சொல்லும்.
இது ஒரு நாடு, இதை பிரித்தாள முடியாது. அப்படி நினைப்பவர்கள் எல்லாம் நாட்டை விட்டு செல்ல வேண்டும். இதை நீங்கள் பல மொழிகளில் சொல்ல வேண்டும்.
ஆனால் நான் என்ன மொழியில் படிக்க வேண்டும் என்பதை யாரும் சொல்லக் கூடாது. நான் மொழி போராட்டத்தில் அரைடவுசர் போட்டுக் கொண்டு பங்கேற்ற பையன். இனிமேல் வலியுறுத்த மாட்டேன் என்று மேல் தலைமை வலியுறுத்திய பிறகு அமைதி அடைந்தோம். அதன்பிறகு நான் இந்தி படம் கூட நடித்தேன். ஆனால் எனக்கு ஒரு வார்த்தை கூட இந்தி தெரியாது.
அதுமாதிரி, உங்கள் சாய்ஸ் என்னவென்று தமிழனிடம் விட்டுவிட்டால் சீன மொழி கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவான். அதற்காக ஆவண செய்ய வேண்டியது அரசாக இருக்க வேண்டுமே தவிர அரசியல் செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.