மசோதாவை நிறுத்தி வைக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது- சட்டப்பிரிவை சுட்டிக்காட்டி சுப்ரீம் கோர்ட்டில் கவர்னர் பதில் மனு தாக்கல்
- ஒரு மசோதா மீதான ஒப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டால் அந்த மசோதா செயலிழந்து விட்டது என்று அர்த்தம்.
- மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப கவர்னருக்கு முழு அதிகாரம் உள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 12 மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி எந்த முடிவும் எடுக்காமல் நிலுவையில் வைத்து உள்ளார்.
இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு மீதான விவாதம் இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்றது. 4 நாட்கள் நடந்த அந்த விவாதத்தின் போது சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் கவர்னர் ஏன் பல ஆண்டுகளாக அமைதி காத்தார்? மசோதாவில் முரண்பாடுகள் இருப்பதாக தோன்றினால் அது தொடர்பாக அரசுடன் அவர் ஏன் தொடர்பு கொண்டு பேசவில்லை? என்று கேள்வி எழுப்பினார்கள்.
இந்த விவாதத்தின் போது ஜனாதிபதிக்கு மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி அனுப்பி இருப்பது பற்றியும் பேசப்பட்டது. அப்போது நீதிபதிகள், "மசோதாக்கள் நீர்த்து போகும் என்று கவர்னர் தரப்பில் சொல்கிறார்கள். அப்படியென்றால் அந்த மசோதாக்களை கவர்னர் எவ்வாறு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கிறார்" என்று கேள்வி எழுப்பினார்கள்.
மேலும் மசோதாக்களை கவர்னர் சட்டசபைக்கு திருப்பி அனுப்பாமல் தன்வசமே வைத்துக் கொண்டால் அதன் நிலை என்னவாகும் என்றும் கேள்வி எழுப்பினார்கள்.
தமிழக அரசு சார்பில் வாதாடிய வக்கீல்கள், "சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கவர்னரால் நிறுத்தி வைக்க முடியாது. மாநில அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டிய கட்டாயத்தை தவிர கவர்னருக்கு வேறு எந்த விருப்ப உரிமையும் கிடையாது" என்று வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு மீதான தங்களின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். அதற்கு முன்னதாக இரு தரப்பினரும் தங்களுக்கு எழும் சில கேள்விகளுக்கு விளக்கம் அளித்து சுப்ரீம் கோர்ட்டில் குறிப்புகளாக தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தனர்.
சுப்ரீம்கோர்ட்டின் இந்த அறிவுறுத்தலை ஏற்று தமிழக அரசு சார்பில் சமீபத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கவர்னருக்கு மசோதாக்களை நிறுத்தி வைக்க எந்த அதிகாரமும் இல்லை என்று உறுதிப்பட கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கவர்னர் ஆர்.என்.ரவி தனக்கு இருக்கும் அதிகாரங்களை குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சாசனத்தின் கீழ் கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம் உள்ளது. பிரிவு 200-ல் குறிப்பிடப்பட்டுள்ள "டிஸ்கிரீஷன்" என்ற வார்த்தை கவர்னருக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரத்தை குறிக்கிறது. கவர்னர் ஒவ்வொரு முறையும் அமைச்சரவை ஆலாசனை படி செயல்பட வேண்டிய அவசியம் இல்லை.
ஒரு மசோதா மீதான ஒப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டால் அந்த மசோதா செயலிழந்து விட்டது என்று அர்த்தம். எனவே காலாவதியான மசோதாவை மாநில சட்டசபையில் நிறைவேற்றி மீண்டும் கவர்னருக்கு அனுப்பும் போது அதன் மீது ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
அவ்வாறு மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப கவர்னருக்கு முழு அதிகாரம் உள்ளது.
மசோதாக்கள் மீது ஒப்புதல் வழங்குவது, ஜனாதிபதிக்கு பரிந்துரைப்பது, ஒப்புதலை நிறுத்தி வைப்பது உள்பட 4 அதிகாரங்கள் விரிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.
தேவைப்பட்டால் அரசியல் சாசன பிரிவு 200-ஐ மேலும் செம்மைப்படுத்த கவர்னர்கள் அதிகாரம் தொடர்பான வழக்குகளை அரசியல் சாசன பிரிவிற்கு மாற்றம் செய்து விசாரிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.