தமிழ்நாடு

பழனி முருகன் கோவிலில் சீர்வரிசை பொருட்களுடன் பழங்குடியின மக்கள் வழிபாடு

Published On 2025-02-22 12:28 IST   |   Update On 2025-02-22 12:28:00 IST
  • காலங்காலமாக பழனி மலை முருகனுக்கு குறவர் இன மக்கள் சீர்வரிசை பொருட்கள் கொடுத்து வருகின்றனர்.
  • ஊர்வலத்தின் முன்பு மேளம், பறை இசை முழங்க சிறுவர்-சிறுமிகள் வேடன்-குறத்தி போன்று வேடமிட்டு ஆடி வந்தது அனைவரையும் கவர்ந்தது.

பழனி:

தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசத்தின் போதும் அதனை தொடர்ந்து தற்போது வரை பக்தர்கள் பழனியில் குவிந்து வருகின்றனர். பல்வேறு காவடிகள் எடுத்தும் பாதயாத்திரையாக வந்து அவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பிரசித்தி பெற்ற எடப்பாடி காவடிக்குழுவினர் 19ம் தேதி பழனி வந்து மலைக்கோவிலில் தங்கி சிறப்பு வழிபாடு செய்தனர்.

மேலும் தங்கள் கைகளால் பஞ்சாமிர்தம் தயாரித்து முருகனுக்கு படைத்தனர். காலங்காலமாக பழனி மலை முருகனுக்கு குறவர் இன மக்கள் சீர்வரிசை பொருட்கள் கொடுத்து வருகின்றனர். அதன்படி இன்று சீர்வரிசை பொருட்களுடன் பழனி வந்தனர். பழங்குடியின மக்கள் பாரம்பரிய நடனம் ஆடி அடிவார பகுதிக்கு வந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குறவர் இன மக்கள் மற்றும் வனவேங்கைகள் கட்சியினர் சீர்வரிசை பொருட்களுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக பஸ்நிலைய பகுதியில் இருந்து மா, பலா, வாழை உள்ளிட்ட பழங்கள், கிழங்கு வகைகள், தேன், தினைமாவு, காய்கறிகள் உள்ளிட்டவற்றை மூங்கில்நார் கூடைகளில் பெண்கள் எடுத்து ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தின் முன்பு மேளம், பறை இசை முழங்க சிறுவர்-சிறுமிகள் வேடன்-குறத்தி போன்று வேடமிட்டு ஆடி வந்தது அனைவரையும் கவர்ந்தது.

குறவர் மகள் வள்ளியை முருக பெருமான் திருமணம் செய்ததால் தாய்வீட்டு சீதனமாக மலைப்பகுதியில் விளையும் பொருட்களை சீர்வரிசையாக கொண்டு வந்து தரிசனம் செய்து வருகின்றோம். பூர்வீக தமிழ்குடி மக்களாகிய எங்களுக்கு அறுபடை வீடுகளிலும் உரிய முக்கியத்துவம் தரவேண்டும் என்றனர்.

Tags:    

Similar News