கடுமையான விலையேற்றம்: கட்டுமான பொருட்களை ஏற்றி வந்த லாரிகளை மறித்து ஒப்பந்ததாரர்கள் போராட்டம்
- திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- நூற்றுக்கணக்கான லாரிகள் நீண்ட தூரத்திற்கு சாலையில் அணிவகுத்து நிற்கின்றன.
மன்னார்குடி:
கட்டுமான தொழிலுக்கு பயன்படும் பி சாண்ட், எம் சாண்ட், ஜல்லி, அரளை உள்ளிட்ட பொருட்களின் கடுமையான விலையேற்றத்தை கண்டித்தும் விலையேற்றத்திற்கு காரணமான கிரஷர் கம்பெனிகளை கண்டித்தும் , தமிழக அரசு விலையேற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தும் விதமாகவும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஒப்பந்தக்காரர்கள் கூட்டமைப்பு அகில இந்திய கட்டுனர் சங்கம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, கட்டுமான தொழிலாளர் மத்திய சங்கம் ஆகியவற்றின் சார்பில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று கரூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து எம் சாண்ட் ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களை ஏற்றி வந்த லாரிகளை மன்னார்குடி அருகே உள்ள கோவில்வெண்ணி, செருமங்கலம், காரிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒப்பந்தக்காரர்கள் ஏராளமானோர் திரண்டு மறித்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக நூற்றுக்கணக்கான லாரிகள் நீண்ட தூரத்திற்கு சாலையில் அணிவகுத்து நிற்கின்றன. தொடர்ந்து லாரிகள் அங்கேயே நிற்பதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.