தமிழ்நாடு

நீர்நிலைகளில் சட்டவிரோதமாக தாமரை பயிரிடுவதை தடுக்கக்கோரி வழக்கு- குமரி கலெக்டர் பதில் அளிக்க உத்தரவு

Published On 2025-02-22 13:03 IST   |   Update On 2025-02-22 13:03:00 IST
  • விவசாயத்துக்கு தண்ணீர் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
  • வணிக ரீதியிலான தாமரை செடிகளை பயிரிடுவது தான் இதுபோன்ற அவலநிலைக்கு காரணம்.

மதுரை:

கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு நீர்ப்பாசன திட்டத்தலைவர் வின்ஸ் ஆன்டோ, மீன் உற்பத்தி பண்ணையாளர்கள் அமைப்பின் தலைவர் சகாயம் என்ற அய்யப்பன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிய அணைகள், நீர்ப்பாசன கால்வாய்கள், ஓடைகள், குளங்கள் போன்றவை ஏராளமாக உள்ளன. நீர்நிலைகளில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்தி நெல், வாழை, காய்கறிகள், ரப்பர், மரவள்ளிக்கிழங்கு, மிளகு, கிராம்பு மற்றும் பிற தானியங்கள் பயிரிடப்படுகின்றன.

இங்கு ஆழமற்ற நீர்நிலைகளில் தாமரை தாவரங்கள் வளருகின்றன. இது அகலமான பச்சை இலைகளையும், நறுமணம் கொண்டதாகவும் உள்ளது. தாமரை இலைகள் குளங்களின் அடிப்பகுதியில் சூரிய கதிர்கள் விழுவதைத் தடுக்கின்றன. இதேபோல தாமரைகளை வணிக நோக்கத்தில் நீர்நிலைகள், கால்வாய்களில் குறிப்பிட்ட தரப்பினர் பயிரிடுகின்றனர்.

இதன் காரணமாக நீர்நிலைகள் மாசுபடுகின்றன. விவசாயத்துக்கு தண்ணீர் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. நீர்நிலைகள், கால்வாய்களில் தாமரை செடிகளில் விவசாயிகள் சிக்கி அவதிப்படும் நிலையும் தொடர்ந்து வருகிறது. வணிக ரீதியிலான தாமரை செடிகளை பயிரிடுவது தான் இதுபோன்ற அவலநிலைக்கு காரணம்.

எனவே சட்டவிரோதமாக வணிக ரீதியில் நீர்நிலைகள், கால்வாய்களில் தாமரை செடிகளை பயிரிடுபவர்கள் மீது நடவடிக்கை கோரி அதிகாரிகளுக்கு மனு அனுப்பினோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எங்கள் மனுவின் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக தாமரை பயிரிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல் சி.டி.பெருமாள் ஆஜராகி, குளங்களில் மட்டுமே தாமரை செடிகள் தானாக வளர்ந்து கிடக்கின்றன. இதனை வணிகரீதியில் பயிரிடுவது சட்டவிரோதம் என வாதாடினார்.

விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து குமரி மாவட்ட கலெக்டர், கோதையாறு வடிகால் நீர்பாசன செயற்பொறியாளர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய என்ஜினீயர் உள்ளிட்டோர் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

Similar News