நெய்வேலியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 கி.மீ. தூரம் ரோடுஷோ
- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று மாலை கடலூர் வந்தார்.
- ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் முதலமைச்சருடன் கைகுலுக்கி மகிழ்ந்தனர்.
நெய்வேலி:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெய்வேலி நகர பகுதியில் 2 கி.மீ., வரை நடந்து சென்று பொதுமக்களுடன் கைகுலுக்கினார். குழந்தைகள், மாணவ, மாணவிகள் என பலரும் முதலமைச்சருடன் செல்பி எடுத்துக் கொண்டாடினர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று மாலை கடலூர் வந்தார். கடலூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் நெய்வேலியில் நடைபெற்ற விழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியில் இருந்து விலகி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
இதனை தொடர்ந்து நெய்வேலி என்.எல்.சி. விருந்தினர் இல்லத்தில் தங்கிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று 9 மணி அளவில் வேப்பூர் திருப்பெயரில் நடைபெறும் பெற்றோர்களை கொண்டாடுவோம் மாநாட்டிற்கு புறப்பட்டு சென்றார். அப்பொழுது நேரு சிலை அருகில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாற்றத்திறனாளிகள் தமிழக முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவர்களிடம் இருந்த மனுக்களை முதலமைச்சர் பெற்றுக் கொண்டார். விருந்தினர் மாளிகையில் இருந்து காரில் சென்ற மு.க.ஸ்டாலினுக்கு நேரு சிலை, பெரியார் சதுக்கம், எம்.ஜி.ஆர். சிலை, மத்திய பஸ் நிலையம், 8 ரோடு சந்திப்பு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கையில் பதாகைகள் ஏந்தி பலூன்கள் வைத்துக்கொண்டு வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து சாலையில் செல்லும்போது பொதுமக்களை பார்த்ததும் உடனடியாக காரில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்றார். அப்போது வழி நெடுகிலும் நின்றிருந்த பெண்கள், குழந்தைகள், தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். சாலையில் 2 1/2 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று வழிநெடுகிலும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை முதலமைச்சர் சந்தித்தார். ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் முதலமைச்சருடன் கைகுலுக்கி மகிழ்ந்தனர். அவர்களை பார்த்து முதல்வர் உற்சாகமாக கையசைத்தார்.
இதனால் தொண்டர்கள் மக்களின் முதல்வர் என ஆரவாரம் எழுப்பினர். முதல்வர் பாதுகாப்பு பணிக்காசு போலீசார் கயிறு கட்டி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தினர். நடந்தே சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழி முழுவதும் பொதுமக்கள் திரண்டு நின்று அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.