குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்
- பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
உடன்குடி:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு அருகே தமிழ்நாடு தொழில் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை (டிட்கோ) சார்பில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இதற்காக ஆதியாகுறிச்சி, மாதவன் குறிச்சி, வெங்கட் ராமானுஜபுரம், சிறுநாடார் குடியிருப்பு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1,200 நிலங்களை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிட்டது. மேலும், இந்த பணிக்காக மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் 4 தாசில்தார்கள் நியமனம் செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் விளை நிலங்களை கையகப்படுத்துவதால் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என கூறி விவசாய நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை வலியுறுத்தி அவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாய நிலங்களை கையகப்படுத்தப்படுவதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அருகில் விண்வெளி பூங்கா அமைப்பதற்காக ஆதியாக்குறிச்சி ஊராட்சியில் 1200 ஏக்கர் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உடன்குடி மெயின் பஜாரில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் 20 கிராமமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், சமூகஆர்வலர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.