இந்து அமைப்பு நிர்வாகிகள் காடேஸ்வரா சுப்பிரமணியம்- அர்ஜூன் சம்பத் மீது திடீர் வழக்கு
- கோவை ஆர்.எஸ்.புரத்தில் கடந்த 14-ந்தேதி குண்டுவெடிப்பு நினைவு தினத்தை முன்னிட்டு மலரஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
- காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
கோவை:
கோவை மாநகர போலீசார் சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்துக்கள் பதிவிடும் நபர்கள் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அவ்வாறு கருத்து பதிவிட்டு சமூக பிரச்சனைகளை ஏற்படுத்தும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவை மாநகர சட்டம் ஒழுங்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு என்பவர் எக்ஸ் வலைதளத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பெயரில் வலைதளத்தில் இரண்டு சமூகத்தினருக்கு இடையே பிரச்சனை ஏற்படும் வகையில் கருத்து பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அழகுராஜ், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இது தொடர்பாக அர்ஜூன் சம்பத்துக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை செய்ய உள்ளனர்.
இதேபோல இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மீதும் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை ஆர்.எஸ்.புரத்தில் கடந்த 14-ந்தேதி குண்டுவெடிப்பு நினைவு தினத்தை முன்னிட்டு மலரஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
இதில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் எழுந்தது. அதன்பேரில் ஆர்.எஸ்.புரம் போலீஸ்நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு காடேஸ்வரா சுப்பிரமணியத்துக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.
அதன்பேரில் நேற்றுமுன்தினம் இரவு காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவருடன் இந்து முன்னணியினரும், பா.ஜ.க.வினரும் சென்றனர். அப்போது அவர்கள் போலீஸ்நிலையத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக போலீசார் காடேஸ்வரா சுப்பிரமணியம், கோவை மாவட்ட பா.ஜ.க. தலைவர் ரமேஷ்குமார் உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியில்லாமல் திரண்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்ததாக கூறி 2 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகர சட்டம்-ஒழுங்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்து, ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.