மும்மொழிக் கொள்கையில் தி.மு.க.வினர் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள்- அர்ஜூன் சம்பத்
- கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மும்மொழிக் கொள்கைதான் இருக்கிறது.
- மும்மொழி கல்வி கொள்கையில் இந்தி திணிப்பு இருந்தால் உதயநிதி ஸ்டாலின் நிரூபிக்க வேண்டும்.
மதுரை:
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு மதுரை தமுக்கத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் பூஜை செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தாய் மொழியை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்தேன். தி.மு.க.வினர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் ஆகியோர் நடத்தும் பள்ளிகளில் மும்மொழி கற்பிக்கப்படுகிறது. நவோதயா பள்ளி வந்தால் தி.மு.க.வின் கல்வி வியாபாரம் கெட்டுப் போய்விடும் என்பதற்காக மும்மொழி கல்விக் கொள்கையை அவர்கள் எதிர்க்கிறார்கள்.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மும்மொழிக் கொள்கைதான் இருக்கிறது. இதில் தி.மு.க.வினர் உள்நோக்கத்தோடு செயல்படுகிறார்கள். தமிழர்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். மும்மொழி கொள்கை நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை. கம்யூனிஸ்ட் காரர்கள் கேரளாவில் வேண்டும் என்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் வேண்டாம் என்கிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின் கெட் அவுட் மோடி என்று சொல்கிறார். இதன் மூலம் அவர் அரசியல் தளத்தை தாழ்த்தி விட்டார். எடப்பாடி பழனிசாமியை தவறாக பேசுகிறார். கெட் அவுட் மோடி என்று சொல்கிறார். அவருக்கு அண்ணாமலை உரிய பதிலடி கொடுத்திருக்கிறார். உலகத்தில் நம்பர் ஒன் டிரெண்டிங் கெட்டவுட் ஸ்டாலின் தான்.
மும்மொழி கல்வி கொள்கையில் இந்தி திணிப்பு இருந்தால் உதயநிதி ஸ்டாலின் நிரூபிக்க வேண்டும். இரு மொழி கல்விக் கொள்கை என்ற பெயரில் தமிழகத்தில் ஆங்கிலக் கல்வி திணிக்கப்படுகிறது. கர்நாடகாவில் ஆங்கிலத்தை திணிக்க முடியாது கன்னடம் மட்டும்தான்.
அ.தி.மு.க. மட்டும் எதிர்க்கட்சி அல்ல. பா.ஜ.க., நாம் தமிழர் உள்ளிட்டவைகளும் எதிர்க்கட்சிகள் தான். அனைவரும் சேர்ந்து தி.மு.க.வை எதிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.