தமிழ்நாடு

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணிநேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க உத்தரவு

Published On 2025-02-20 13:34 IST   |   Update On 2025-02-20 13:34:00 IST
  • உயிரிழந்த ஜமுனாவின் கணவருக்கு 4 வாரத்திற்குள் 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
  • அவசர நேரத்தில் பயன்படும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணிநேரமும் ஆம்புலன்ஸ் தயாராக இருக்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த இருங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவிழிவேந்தன். இவர் தன்னுடைய மனைவி ஜமூனாவிற்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் மாம்பாக்கம் ஆரம்ப சுகாதர நிலைய மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

அங்கு மகப்பேறு மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஆகியோர் ஜமூனாவிற்கு பிரசவம் பார்த்ததில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அதிக ரத்த போக்கு ஏற்பட்டதையடுத்து ஜமுனாவை ஆரணி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்ததில், ஜமுனா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு 'தினந்தந்தி' நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், பிரசவத்தின் போது உயிரிழந்த ஜமுனாவின் கணவருக்கு 4 வாரத்திற்குள் 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதர மருத்துவமனைகளிலும் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்க 24 மணி நேரமும் பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும். அவசர நேரத்தில் பயன்படும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணிநேரமும் ஆம்புலன்ஸ் தயாராக இருக்க வேண்டும். மருத்துவ வசதி, மருத்துவர் இருப்பதை உறுதி செய்ய அடிக்கடி நேரில் ஆய்வு செய்ய பொது சுகாதாரத்துறை இயக்குநருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News