தைப்பூசத்திற்கு பின்பும் குறையாத கூட்டம்- அலகு குத்தி, பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
- வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்தனர்.
- பழனி நகரின் முக்கிய வீதிகள் வழியே பழனி முருகன் கோவிலை அடைந்தனர்.
பழனி:
பழனி முருகன் கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இந்த ஆண்டு இத்திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11-ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாதயாத்திரையாகவும் வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் தைப்பூச திருவிழா நிறைவடைந்த பிறகும் ஏராளமான பக்தர்கள் பழனி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் அலகுகுத்தியும், காவடிகள் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
அதன்படி கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்தனர். முன்னதாக அந்த குழுவை சேர்ந்த பக்தர்கள் 18 பேர் சண்முகாநதியில் இருந்து பறவைக்காவடியில் பழனிக்கு வந்தனர். இதற்காக பெரிய 2 கிரேன் மூலம் பறவைக்காவடி எடுத்து காரமடை, நால்ரோடு சந்திப்பு, புதுதாராபுரம் சாலை, குளத்துரோடு, திருஆவினன்குடி என பழனி நகரின் முக்கிய வீதிகள் வழியே பழனி முருகன் கோவிலை அடைந்தனர்.
மேலும் 10-க்கும் மேற்பட்டோர் 15 அடி நீள அலகுகுத்தியும் வந்தனர். ராட்சத கிரேன் மூலம் பறவைக்காவடியில் வந்த பக்தர்களை பொதுமக்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். இதுகுறித்து அந்த குழுவை சேர்ந்த பக்தர்கள் கூறுகையில், கடந்த 49 ஆண்டுகளாக எங்கள் பகுதியில் இருந்து பாதயாத்திரையாக வருகிறோம். தைப்பூச திருவிழா முடிந்த பிறகு வால்பாறையில் இருந்து பாதயாத்திரையாக பழனி சண்முகாநதிக்கு வந்து பின் அங்கிருந்து பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் பழனிக்கு வருவோம் என்றனர்.