தமிழ்நாடு

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி அன்புமணி தலைமையில் ஆர்ப்பாட்டம்

Published On 2025-02-20 13:52 IST   |   Update On 2025-02-20 13:52:00 IST
  • பா.ம.க கவுரவ தலைவர் ஜி.கே. மணி முன்னிலை வகித்தார்.
  • சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாத வரை அனைத்து சமூகத்திற்கும், உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காது என்றும் வலியுறுத்தினார்கள்.

சென்னை:

பாட்டாளி மக்கள் கட்சி சமூக நீதி பேரவை சார்பில் பல்வேறு சமூகங்களை சேர்ந்த கட்சிகளின் ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் பா.ம.க.தலைவர் டாக்டர் அன்புமணி தலைமையில் நடந்தது. அப்போது அனைத்து சமூகங்களை ஒன்று திரட்டி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று காலை தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. மூர்த்தி வரவேற்றார். பா.ம.க கவுரவ தலைவர் ஜி.கே. மணி முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் விளக்கி பேசினார்கள். த.மா.கா. சார்பில் துணைத்தலைவர் விடியல் சேகர், அமைப்பு செயலாளர் ஜி. ஆர். வெங்கடேஷ், அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளர் செந்தமிழன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை. ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ., தமிழ் நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் என்ஜினீயர் டி. விஜயகுமார், தமிழர் தேசம் கட்சி தலைவர் கே.கே. செல்வகுமார், பறையர் பேரவை தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சை முத்து, தென் இந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன், கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் கவுண்டர், யாதவ மகா சபை செயலாளர் சேது மாதவன் ஆகியோர் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதின் அவசியம் பற்றியும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாத வரை அனைத்து சமூகத்திற்கும், உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காது என்றும் வலியுறுத்தினார்கள்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் பா.ம.க. எம்.எல்.ஏ. இரா.அருள், சென்னை மாவட்ட தலைவர்கள் ஜெயராமன், வெங்கடேசன் மற்றும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி வ.மு.பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் வழக்கறிஞர் பாலு நன்றி கூறினார்.

Tags:    

Similar News