தைப்பூச தேர்த்திருவிழா 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
- தைப்பூச தேர்த்திருவிழாவை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவிலில் வருகிற 28-ந் தேதி தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 5-ந் தேதி காலையில் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், 9-ந் தேதி இரவு மகா தரிசனமும் நடைபெறுகிறது. இதுதவிர பல்வேறு நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறும்.
தைப்பூச தேரோட்டத்தின் போது ஏராளமான பக்தர்கள் சென்னிமலை முருகன் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக தைப்பூச தேர்த்திருவிழாவை நடத்துவது குறித்த அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பெருந்துறை தாசில்தார் சிவசங்கர் தலைமை தாங்கினார். சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், கோவில் ஆய்வாளர் ரவிக்குமார், செயல் அலுவலர் ஏ.கே.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தைப்பூச தேரோட்டம் நடைபெறும் நாளான வருகிற 5-ந் தேதி மற்றும் 6-ந் தேதி ஆகிய 2 நாட்களும் மலைப்பாதை வழியாக முருகன் கோவிலுக்கு செல்ல கார்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களை அனுமதிப்பதில்லை என்றும், அந்த சமயத்தில் கூடுதல் பஸ்கள் ஏற்பாடு செய்து அதில் பக்தர்களை அழைத்து செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் திருவிழா காலங்களில் மலைக்கோவில் மற்றும் அடிவாரத்தில் மருத்துவ முகாம்கள் அமைப்பது, பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் பார்த்திபன், பேரூராட்சி துணை தலைவர் சவுந்தர்ராஜன் மற்றும் உள்ளாட்சி, மின்சா ரம், சுகாதாரம், உள்ளிட்ட அனைத்து துறைகளை சேர்ந்த அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.