கோவையில் கொலை வழக்கில் 3 மாதமாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது
- சத்தியபாண்டி கொலை வழக்கில் கோவையை சேர்ந்த சஞ்சய்ராஜா உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
- ரவுடி தில்ஜீத்க்கு போலீசாரை பார்த்து தப்பி ஓட முயன்ற போது கால்முறிவு ஏற்பட்டது.
கோவை,
கோவையில் சத்தியபாண்டி என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொலைசெய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கோவையை சேர்ந்த சஞ்சய்ராஜா உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவ ர்களிடம் நடத்திய விசாரணையில், சஞ்சய் ராஜா தனது நண்பரான கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரும் தற்போது கோவையில் வசித்து வரும் தில்ஜித் (வயது 44) என்பவருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி சத்திய பாண்டியை கொலை செய்தது தெரியவந்தது.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த தில்ஜித்தை போலீசார் தேடி வந்தனர்.
அவர் கடந்த 3 மாதங்களாக டெல்லி, மும்பை, கொல்கத்தா என வெளிமாநிலங்களில் தலைமறைவாக இருந்தார்.
இந்தநிலையில் தில்ஜித் கோவை வந்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அவரை நேற்றிரவு ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்ய சென்றனர். போலீசாரை பார்த்ததும் தில்ஜித் தப்பி ஓடினார்.
அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் கால் எலும்பு உடைந்தது.
இதனையடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட தில்ஜித்தை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.