புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வனத்துறை கடும் கட்டுப்பாடு
- வனப்பகுதியில் அத்துமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- வனங்களை ஒட்டிய சாலைகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் புத்தாண்டு கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும்.
ஊட்டி:
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா, மாயார், மசினகுடி, சிறியூர் மற்றும் பொக்காபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகளில் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதன்காரணமாக அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு வந்து புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
அப்போது அவர்கள் மலையடிவார பகுதியில் இருக்கும் வனங்களுக்கு சென்று அங்கு தீ மூட்டுவது, மது அருந்திவிட்டு ஆடிப் பாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இதுபோன்ற பகுதிகளில் ரிசார்ட்கள் மற்றும் காட்டேஜ்களில் அதிக சத்தத்துடன் மேற்கண்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் சுற்றுலா விடுதிகளில் புத்தாண்டையொட்டி பட்டாசுகள் வெடிக்கவும், வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தவும், கேம்ப் பயர் மற்றும் அதிக ஒலி எழுப்பும் இசைக்கருவிகளை பயன்படுத்தவும் வனத்துறையினர் இந்தாண்டும் வழக்கம்போல தடை விதித்து உள்ளனர்.
இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண் கூறியதாவது:-
பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம் போன்ற பகுதிகளில் உள்ள தனியார் சுற்றுலா விடுதிகளில் வருகிற 31-ந்தேதி இரவு மற்றும் புத்தாண்டு தினத்தன்று பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல அதிக சத்தத்துடன் கூடிய நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் விலங்குகளுக்கு உணவு கொடுக்கவும் அனுமதி மறுக்கப்படுகிறது.
மசினகுடி-முதுமலை சாலைகளில் இரவு 9 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் செல்லக்கூடாது. மேலும் வனவிலங்குகளை துன்புறுத்தும் வகையில் வாகனங்களை இயக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளோம். தற்போது பனியின் காரணமாக புற்கள் காய்ந்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
புத்தாண்டை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள் தீ மூட்டினால் எளிதில் வனங்களுக்கு பரவும் அபாயம் நீடிக்கிறது. எனவே இதனை தீவிரமாக கண்காணிக்கும் வகையில் வனஊழியர்கள் ரோந்து பணிகளை மேற்கொள்வார்கள். வனப்பகுதியில் அத்துமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வனங்களை ஒட்டிய சாலைகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் புத்தாண்டு கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.