தமிழ்நாடு

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.30 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்- 4 பேர் கைது

Published On 2025-01-23 10:24 IST   |   Update On 2025-01-23 10:24:00 IST
  • வ.உ.சி. துறைமுகம் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
  • போதைப்பொருள் கடத்தலுக்கு துறைமுகத்தில் பணிபுரிந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர் மாரிமுத்து உதவியது தெரியவந்தது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள பழைய வ.உ.சி. துறைமுகம் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து பழைய துறைமுகத்திற்கு வரும் நபர்கள் குறித்து தீவிர கண்காணிப்பில் மத்திய வருவாய் புலனாய்வு துறை உதவி இயக்குனர் முரளி தலைமையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதில் நேற்று இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் தோணி மூலம் மாலத்தீவு நாட்டிற்கு 12 கிலோ செறிவூட்டப்பட்ட கஞ்சா ஆயில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனுடைய சர்வதேச மதிப்பு ரூ. 30 கோடி என்றும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் பணிபுரிந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர் மாரிமுத்து உதவியதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கடத்தலில் தொடர்புடைய தூத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்த சுதாகர் (வயது36), ஜேசுராஜ் (34), தோணியின் மாலுமியான கிங்சிலி (56), மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் மாரிமுத்து ஆகிய 4 பேரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி பழைய துறைமுக பகுதியில் இருந்து மத்திய தொழிற் பாதுகாப்படை வீரர் துணையுடன் தோணி மூலம் போதைப்பொருள் கடத்த இருந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல் துறைமுகத்தில் இருந்து வெளியேற்றப்படும் பல கோடிக்கணக்கான ரூபாய் பொருட்கள் அதிகாரிகள் உடந்தையுடன் வெளி ஆட்கள் உதவிகள் மூலம் கண்டெய்னர் மற்றும் டாரஸ் லாரிகள் மூலம் வெளியே கொண்டு சென்று தூத்துக்குடியை சுற்றியுள்ள பல்வேறு குடோன்களில் கடத்தி பதுக்கி வைக்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

இதுகுறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News