ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.17 லட்சத்தை இழந்ததால் தீயணைப்பு வீரர் தற்கொலை- விசாரணையில் தகவல்
- கருப்பசாமி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
- ரம்மி விளையாடிக் கொண்டிருப்பவர்கள் உடனடியாக அதிலிருந்து வெளியே வர வேண்டும்.
நாகர்கோவில்:
நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 29). இவர் நாகர்கோவில் தீயணைப்பு துறையில் வேலை பார்த்து வந்தார். நாகர்கோவிலில் வாடகை வீட்டில் அவரது மனைவி மகேஸ்வரியுடன் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து கருப்பசாமி வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார்.
இந்தநிலையில் திருப்பதிசாரம் டோல்கேட் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ரெயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கருப்பசாமி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததில் கருப்பசாமி தற்கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது.
நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்த முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தீயணைப்பு வீரர் கருப்பசாமி தற்கொலை தொடர்பாக வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவிலை சேர்ந்த தீயணைப்பு வீரர் கருப்பசாமி ரம்மி விளையாட்டில் ரூ.17 லட்சம் தொலைத்துள்ளார். இதனால் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே தங்களது குழந்தைகள், கல்லூரியில் படிக்கலாம், வேலை பார்த்துக் கொண்டிருக்கலாம், அவர்கள் ரம்மி விளையாடினால் அதை கண்டுபிடித்து அவர்களுக்கு அறிவுரைகளை கூறவேண்டும்.
கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். ரம்மி விளையாட்டினால் பணத்தை மட்டுமின்றி ஆளை இழக்க நேரிடும். எனவே ரம்மி விளையாடிக் கொண்டிருப்பவர்கள் உடனடியாக அதிலிருந்து வெளியேவர வேண்டும். உங்களுக்கு பணம் கிடைக்காது. ஒட்டுமொத்த பணத்தையும் இழக்க நேரிடும். எனவே ரம்மி விளையாடி கொண்டிருப்பவர்கள் உடனடியாக அந்த விளையாட்டை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.