பெரியார் பற்றி பேசுவதற்கு சீமானுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை - கே.பி.முனுசாமி
- கரடுமுரடான வார்த்தை சொல்லி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் பெரியார்.
- பெரியாரை பற்றி விமர்சனம் செய்வதற்கே பெரியார் தான் காரணம் என்பதை அவர் மறந்து விட்டார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பெரியார் பற்றி பேசுவதற்கு சீமானுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை என்று கே.பி.முனுசாமி அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.பி.முனுசாமி, "பெரியார் பற்றி பேசுவதற்கு சீமானுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. பெரியாரை பற்றி விமர்சனம் செய்வதற்கே பெரியார் தான் காரணம் என்பதை அவர் மறந்து விட்டார். எங்களை போன்ற சாதாரண மக்களை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள் அரசியல் ரீதியா பல்வேறு பொறுப்புகளுக்கு வந்து உங்கள் முன் பேசுவதற்கு வாய்ப்பை உருவாக்கி கொடுத்தது பெரியார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பும் ஒரு குறிப்பிட்ட மக்களிடத்தில் தான் ஆட்சி இருந்தது. அந்த குறிப்பிட்ட மக்களிடத்தில் உள்ள குறைகளை எடுத்துச்சொல்லி, மூட பழக்க வழக்கங்களை பின்பற்றி வந்த ஏழை எளிய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, உயர்ந்தவன் - தாழ்ந்தவன், உயர்ந்த சாதி - தாழ்ந்த சாதி என்ற நிலையை மாற்றி மனிதர் அனைவரும் சமம் என்பதை மக்களிடத்தில் எடுத்து சொல்லி கரடுமுரடான வார்த்தை சொல்லி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் பெரியார்.
பெரியாரின் மாணவராக இருந்த அண்ணா அவர்கள் அரசியல் கட்சியை ஆரம்பித்து வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து தந்தை பெரியாரின் கொள்கைகளை சட்டமாக கொண்டு வந்தார். இன்னும் 50 ஆண்டுகள் தமிழ்நாட்டில் திராவிட ஆட்சி இருப்பதற்கு அடித்தளமிட்டது பெரியார் தான்" என்று தெரிவித்தார்.