கோயில் நிலத்தில் குடியிருப்பு- அதிக வரி வசூலிக்கும் அரசாணையை திரும்பப்பெற வேண்டும்: சீமான் வலியுறுத்தல்
- எந்தக் கடவுளும் மக்களுக்குத் துன்பத்தைக் கொடுத்து, இன்பம் காண வேண்டும் என்பதை விரும்புவதில்லை.
- மக்களைத் துன்புறுத்தி கடவுளை மகிழ்விக்க முடியும் என்பது சிறந்த வழிபாடும் ஆகாது.
கோயில் நிலத்தில் குடியிருக்கும் மக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்கு அதிக வரி வசூலிக்கும் அரசாணையை திமுக அரசு திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு, பன்மடங்கு வரியை அதிகரித்து வலுக்கட்டாயமாக வசூலிக்கும் தமிழ்நாடு அரசின் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அறநிலையத்துறை, கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் குடியிருப்புகள் மற்றும் சிறு கடைகள் அமைத்து, அவற்றையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். மக்களுக்கு உதவிடும் நோக்கத்துடன், கருணை அடிப்படையில் மிகக்குறைந்த தொகையில் அறநிலையத்துறையின் சார்பாக கடைகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.
அக்கடைகள் மூலம் அன்றாடம் வியாபாரம் நடத்திக் கிடைக்கும் வருமானத்தின் மூலம் வாழ்ந்துவரும் மக்களிடம், தற்போதைய திமுக அரசு இலட்சக்கணக்கில் வரி கட்டச்சொல்லி மிரட்டுவதும், கடைகளைப் பூட்டி முத்திரை வைப்பதும் பெருங்கொடுமையாகும்.
'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' என்பதே இறைநெறி கூறும் அறநெறியாகும். எந்தக் கடவுளும் மக்களுக்குத் துன்பத்தைக் கொடுத்து, இன்பம் காண வேண்டும் என்பதை விரும்புவதில்லை. மக்களைத் துன்புறுத்தி கடவுளை மகிழ்விக்க முடியும் என்பது சிறந்த வழிபாடும் ஆகாது.
ஆகவே, தமிழ்நாடு அரசு கோயில் நிலத்தில் குடியிருக்கும் மக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்கு அதிக வரி வசூலிக்கும் அரசாணையைத் திரும்பப்பெற்று, குறைந்த கட்டணம் வசூலிக்கும் பழைய அரசாணையையே மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன் என சீமான் கூறியுள்ளார்.