வடசென்னை வளர்ச்சி திட்டப்பணிகள்: எண்ணூர், ராயபுரம், தண்டையார்பேட்டையில் அமைச்சர் ஆய்வு
- திருப்பரங்குன்ற மலை பகுதியில் அசைவம் உண்ட விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்யப்படும்.
- நீண்ட நெடிய சட்டப்போராட்டத்தை நடத்தி நிச்சயம் அரசு வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்கும்.
திருவொற்றியூர்:
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று காலை எண்ணூரில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம் மற்றும் சந்தை, ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் கட்டப்பட்டு வரும் தண்டையார்பேட்டை பஸ் நிலையம், ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் கட்டப்பட்டு வரும் சமூக நலக்கூடம், துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் கட்டப்பட்டு வரும் 700 புதிய குடியிருப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
வடசென்னை வளர்ச்சி திட்டப்பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். இந்த பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது.
வால்டாக்ஸ் சாலையில் 700 குடியிருப்புகள் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்படுத்தும் வகையில் அமையும். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட 389 வாக்குறுதிகளை நிறைவேற்றி சொன்னதை செய்யும் அரசாக இந்த அரசு உள்ளது. சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு செல்லும் சாலை நெடுஞ்சாலை முடியும் இடத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் ஒரு வழி பாதையை நான்கு வழி பாதையாக 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாற்ற உள்ளோம். பக்தர்களின் தேவைக்கு ஏற்ப தரிசனம் தடைபடாமல் இருக்க 19 கோவில்களில் பெருந்திட்ட வரைவு செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறுவாபுரி மற்றும் திருத்தணி கோவில்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் பாதை விரிவாக்க பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும்.
திருப்பரங்குன்ற மலை பகுதியில் அசைவம் உண்ட விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்யப்படும்.
நூற்றாண்டுக்கு மேலாக தமிழக மண்ணில் வேரூன்றிய பெரியாரை அழிக்க இனி ஒருவர் பிறந்து வரவேண்டும். பெரியாரின் பகுத்தறிவு கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சிலர் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக செயல்பட்டு வருகிறார்கள். வள்ளுவரையும் வள்ளலாரையும் காழ்ப்புணர்ச்சி கொண்டு பேச அரசு இடம் கொடுக்காது. வள்ளலார் சர்வதேச மையம் இந்து சமய அறநிலைத்துறை நிதியில் கட்டப்படவில்லை, தமிழக அரசின் நிதியில் இருந்து தான் கட்டப்பட்டு வருகிறது.
ஏ பிரிவு, பி பிரிவு என இரண்டு பிரிவுகளாக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பி பிரிவு பணிக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்திற்கு வழக்கு சென்றது. எங்கள் தரப்பு வழக்கறிஞர் அன்று வராத காரணத்தால், வழக்கு 24-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
நீண்ட நெடிய சட்டப்போராட்டத்தை நடத்தி நிச்சயம் அரசு வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, மாநகராட்சி மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் எஸ். சுதர்சனம் கே.பி சங்கர், மண்டல குழு தலைவர் தி.மு. தனியரசு, பகுதி செயலாளர் அருள்தாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.