உள்ளூர் செய்திகள்

நெல்லை அருகே முன்விரோதம் காரணமாக வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு

Published On 2024-12-18 05:14 GMT   |   Update On 2024-12-18 05:14 GMT
  • 7 பேர் கும்பல் வழிமறித்து தாக்குதல்.
  • தோள்பட்டை, கால் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

நெல்லை:

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பள்ளக்கால் பொதுக்குடி கிராமம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் செய்யது மசூது (வயது 55). இவர் அப்பகுதியில் பிள்ளையார்கோவில் தெருவில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11.25 மணி அளவில் அவர் ஓட்டலில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் அம்பை-ஆலங்குளம் சாலையில் சென்றபோது எதிரே 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 7 பேர் கும்பல் அவரை வழிமறித்தது. இதனால் பயந்துபோன மசூது அருகில் உள்ள தெருவுக்குள் ஓட்டம் பிடித்தார்.


உடனே மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய 4 பேர் கும்பல் மசூதுவை ஓட ஓட விரட்டிச்சென்று கை, தோள்பட்டை, கால் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பாப்பாக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்த மசூதுவை மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அப்போது அந்த பகுதியில் பள்ளிவாசல் தெருவில் உள்ள ஒருவீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அங்கு போலீசார் விரைந்து சென்றனர்.

அப்போது அந்த பகுதியில் வசிக்கும் பாய் வியாபாரியான மைதீன்(52) என்பவரது வீட்டின் கதவு மற்றும் ஜன்னலை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு பெட்ரோல் குண்டை மர்ம கும்பல் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

அதன்பின்னரே அந்த சம்பவத்தில் தொடர்புடைய அதே கும்பல் ஓட்டல் தொழிலாளியான மசூதுவை வெட்டிவிட்டு சென்றுள்ளது. அந்த கும்பல் பாப்பாக்குடி மற்றும் நந்தன்தட்டை பகுதிகளில் உள்ள 6 வீடுகளின் கதவுகளை அரிவாளால் வெட்டியதோடு, முக்கிய பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களையும் உடைத்து விட்டு தப்பிச்சென்றது.

இந்த சம்பவம் தொடர்பாக பாப்பாக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரமேஷ் கண்ணா வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் மசூதுவை வெட்ட அரிவாளுடன் மர்ம கும்பல் ஓடும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நள்ளிரவில் கும்பல் பெட்ரோல் குண்டு வீசி அரிவாளால் வாலிபரை வெட்டிய சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவின்பேரில் பாப்பாக்குடி, பள்ளக்கால் பொதுக்குடி உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இடைகால் உள்ளிட்ட முக்கிய சாலை சந்திப்புகளில் பேரிகார்டுகள் போடப்பட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பள்ளக்கால் பொதுக்கு டியில் உள்ள அரசு பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பாப்பாக்குடியை சேர்ந்த செல்வசூர்யா என்ற மாணவன் கடந்த 2022-ம் ஆண்டு பள்ளியில் நடந்த தகராறில் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பள்ளக்கால் பொதுக்குடி, பாப்பாக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் செல்வசூர்யாவின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் விதமாக அவருக்கு நெருக்கமானவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த முன்விரோதத்தில் அவரது கொலையில் தொடர்புடையவர்களின் உறவினர்கள் வீடுகளை குறி வைத்து அரிவாளால் கதவுகளை வெட்டியும், பெட்ரோல் குண்டு வீசியும் அட்டகாசம் செய்துள்ளனர்.

மேலும் சமீபத்தில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் ஊருக்குள் வேகமாக சென்றதை தட்டிக் கேட்டவர் வீடு, தங்களுக்கு வழக்கமாக கடையில் பொருட்களை கடனாக வழங்கிய நிலையில் தற்போது பொருட்கள் வழங்க மறுத்த கடைக்காரர் வீடு என அனைத்து தரப்பினரின் வீடுகளையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் 18 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News