தமிழ்நாடு

மு.க.அழகிரி ஆதரவாளர்கள் 9 பேர் மு.க.ஸ்டாலினுக்கு மன்னிப்பு கடிதம்- 2 மாதங்களாகியும் பதில் இல்லாததால் ஏமாற்றம்

Published On 2024-12-18 05:10 GMT   |   Update On 2024-12-18 05:10 GMT
  • கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மு.க.அழகிரி தனது தி.மு.க. எதிர்ப்பை கைவிட்டு மவுனம் காத்தார்.
  • மன்னிப்பு கடிதம் தி.மு.க. முதன்மை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மூலம் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

மதுரை:

தி.மு.க. தென் மண்டல அமைப்பு செயலாளராகவும், மத்திய மந்திரியாகவும் இருந்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தி.மு.க.வினரின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர் மு.க.அழகிரி. கடந்த 2009 ஆம் ஆண்டு மதுரை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மு.க.அழகிரி அமோக வெற்றி பெற்று மத்திய கேபினட் மந்திரியானார். இதனால் தி.மு.க.வில் மு.க.அழகிரியின் ஆதிக்கம் மேலோங்க தொடங்கியது.

இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி உத்தரவின் பேரில் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மு.க.அழகிரியை தி.மு.க.வில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். மேலும் அவரது ஆதரவாளர்கள் 15 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து மு.க.அழகிரி தி.மு.க.வுக்கு எதிராக பல்வேறு சமயங்களில் அரசியல் வியூகங்களை கையாண்டார். மு.க.ஸ்டாலினையும் பொது நிகழ்ச்சிகளில் விமர்சித்தார்.

கடந்த 2016 சட்டசபை தேர்தல் மற்றும் 2019 பாராளுமன்ற தேர்தல்களில் தி.மு.க.வுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்த மு.க.அழகிரி, தனது ஆதரவாளர்களை எதிரணிக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபடுத்தினார். இது தி.மு.க. தலைமைக்கு மு.க.அழகிரி மீது மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மு.க.அழகிரி தனது தி.மு.க. எதிர்ப்பை கைவிட்டு மவுனம் காத்தார். பின்னர் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மு.க. அழகிரி, மு.க.ஸ்டாலினை பாராட்டி கருத்துக்களை தெரிவித்தார். மு.க. அழகிரியின் திடீர் மனமாற்றம் தி.மு.க.வினர் மத்தியில் பரவலாக பேசும் பொருளானது. மு.க.அழகிரியை தி.மு.க.வில் மீண்டும் கட்சி தலைமை சேர்த்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் பேசப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

இதற்கிடையே மு.க.அழ கிரி தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் மீண்டும் தி.மு.க.வில் சேர்ந்து கட்சி பணி ஆற்ற விருப்பம் தெரிவித்தனர். இது தொடர்பாக மு.க.அழகிரி தனது கண்ணசைவை காட்டாத நிலையில் ஆதரவாளர்கள் 15 பேரில் 9 பேர் மட்டும் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி மதுரை நகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. மூலம் கட்சி தலைமைக்கு அனுப்பி உள்ளனர்.

மன்னிப்பு கடிதம் எழுதியவர்கள் முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன், முன்னாள் மண்டல தலைவர் கோபிநாதன், உதய குமார் எம்.எல்.ராஜ், முபாரக் மந்திரி, அன்பரசன், கொட்டாம்பட்டி ராஜேந்திரன், இசக்கிமுத்து ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களது மன்னிப்பு கடிதம் தி.மு.க. முதன்மை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மூலம் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் நிலையில் இரண்டு மாதங்கள் ஆகியும் கட்சி தலைமையிடம் இருந்து எவ்வித பதிலும் வராததால் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மன்னிப்பு கடிதம் எழுதியவர்களில் ஒருவர் கூறுகையில், அண்ணன் மு.க. அழகிரி தலைமையில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தி.மு.க.வை வளர்க்க அயராது பாடுபட்டோம். பல தேர்தல்களில் இரவு-பகல் பாராது உழைத்து தி.மு.க.வுக்கு வெற்றியை பெற்று தந்துள்ளோம். அந்த தகுதியின் அடிப்படையில் மீண்டும் கட்சியில் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். இதற்காகவே மன்னிப்பு கடிதத்தை தி.மு.க. தலைமைக்கு எழுதி அனுப்பினோம். ஆனாலும் இதுவரை மேலிடத்திலிருந்து எந்தவிதமான உத்தரவும் வரவில்லை என்று தெரிவித்தார்.

மு.க.அழகிரி ஆதரவாளர்களின் மன்னிப்பு கடிதம் கொடுக்காத சிலர் கூறும்போது, தி.மு.க.வில் சேர அண்ணன் அழகிரி இதுவரை யாருக்கும் அனுமதி தரவில்லை. ஆனால் சிலர் அவர்களாகவே தனிப்பட்ட முறையில் கட்சியில் சேர ஆர்வம் தெரிவித்து மன்னிப்பு கடிதம் கொடுத்து தங்களை இணைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அவர்களது விருப்பத்தை கட்சி மேலிடம் ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை என்றார்.

எனவே மன்னிப்பு கடிதம் கொடுத்த மு.க.அழகிரி ஆதரவாளர்கள் தி.மு.க.வில் மீண்டும் சேர்க்கப்படுவார்களா? அல்லது தனித்து விடப்படுவார்களா? என்பது கட்சி மேலிடத்தின் கையில் தான் இருக்கிறது என்று மதுரை முக்கிய தி.மு.க. நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News