போட்டியில் கிடாக்கள் ஆவேசமாக மோதிக்கொண்ட காட்சி.
திண்டுக்கல் அருகே கிடா முட்டு போட்டி- ஆவேசமாக பாய்ந்த ஆடுகள்
- கோர்ட்டு அனுமதியுடன் மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலின்படி போட்டிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டது.
- பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட கிடாக்கள் கொண்டுவரப்பட்டன.
கொடைரோடு:
திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை போலவே பல்வேறு இடங்களில் கிடாமுட்டு போட்டியும், சேவல் சண்டைகளும் நடத்தப்பட்டு வந்தன. இதுபோன்ற போட்டி நடைபெறும் இடங்களில் பார்வையாளர்கள் மற்றும் போட்டியாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை நடந்ததால் இதற்கு தடைவிதிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து கோர்ட்டு அனுமதியுடன் மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலின்படி போட்டிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டது. அதன்படி திண்டுக்கல் அருகில் உள்ள அம்மையநாயக்கனூரில் இன்று கிடாமுட்டு போட்டி நடத்தப்பட்டது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட கிடாக்கள் கொண்டுவரப்பட்டன.
மைதானத்தில் ஆவேசத்துடன் நீண்டநேரம் நின்று களமாடி எதிரில் உள்ள கிடாவை நிலைகுலைய செய்த கிடாவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இப்போட்டியை காண பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கிடாக்கள் ஆவேசமாக முட்டியபோது கைதட்டி ஆராவாரம் செய்தனர்.
வெற்றிபெற்ற கிடாவின் உரிமையாளர்களுக்கு விழாக்குழு சார்பில் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.