உயர் ரக போதைப் பொருள் விற்பனை: பெண் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் கூட்டாளிகளுடன் கைது
- போலீசார் சுற்றி வளைத்து 7 பேர் கும்பலையும் பிடித்தனர்.
- சொத்துக்களை பறிமுதல் செய்ய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை:
கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா, போதைப்பொருள் விற்பனை நடைபெற்று வருகிறது.
இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தனிப்படை அமைக்கப்பட்டு, அவர்கள் கஞ்சா, போதைப்பொருள் விற்பவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மாநகர போலீசாருக்கு கோவை மாநகர பகுதிகளில் உயர் ரக போதைப்பொருட்கள் விற்க கும்பல் ஒன்று இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் தனிப்படை இன்ஸ்பெக்டர் விவேக் மற்றும் தனபால் தலைமையிலான போலீசார் ஆர்.எஸ்.புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மேட்டுப்பாளையம் ரோடு பூமார்க்கெட், அம்மா உணவகம் கேட் அருகே சந்தேகத்திற்கிடமாக 7 பேர் நின்றிருந்தனர்.
இதை பார்த்த போலீசார் அவர்களின் அருகில் சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர்.
உடனடியாக போலீசார் சுற்றி வளைத்து 7 பேர் கும்பலையும் பிடித்தனர். பின்னர் அவர்களை பிடித்து சோதனை செய்தனர்.
அவர்களிடம் எம்.டி.எம்.ஏ. பவுடர், கொகைன், கிரீன் கஞ்சா, உலர்ந்த கஞ்சா உள்ளிட்ட உயர்ரக போதைப் பொருள் இருந்தது. இது தொடர்பாக போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 7 பேரையும் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில், இவர்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டி இத்தலார் போத்தியாடா பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது39), கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஆனந்தூரை சேர்ந்த விநாயகம் (34), கோவை பி.என்.பாளையம் கிருஷ்ணகாந்த் (35), வடவள்ளி மகாவிஷ்ணு (28), சுங்கம் பைபாஸ் ஆதர்ஷ் (24), நஞ்சுண்டாபுரம் ரித்தேஷ் லம்பா (41), ரோகன் செட்டி (30) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 7 பேரையும் கைது செய்தனர். கைதானவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.
கைதான மணி கண்டன் என்பவர், நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த ரிதேஷ் லம்பா மூலமாக மகராஷ்டிராவை சேர்ந்த ஜேக்கப் பிராங்களின் என்பவரிடம் இருந்து எம்.டி.எம்.ஏ. என்ற உயர் ரக போதைப்பொருள் மற்றும் கொகைன் வாங்கி, இவர்களுடன் சேர்ந்து இங்கு விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல் கிரிஷ் ரோகன் செட்டி என்பவர் இமாச்சல பிரதேசத்தில் இருந்து கஞ்சா மற்றும் கிரீன் கஞ்சா, உயர் ரக போதைப்பொருட்களை கோவைக்கு வாங்கி வந்து, அதனை இங்கு பதுக்கி வைத்ததும், அதனை கோவையில் உள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து இளைஞர்களை குறி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
போதைப்பொருள், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அவர்கள் அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் போதைப்பொருள் மற்றும் கஞ்சா விற்று சம்பாதித்த பணத்தில் கோவைப்புதூரில் புதிதாக ஒரு வீடு கட்டி வருகின்றனர். அத்துடன் காரமடை டீச்சர்ஸ் காலனி பகுதியில் புதிதாக வீடும், ஒரு வீட்டு மனை வாங்கியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கைதான 7 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
மேலும் போதைப்பொருள் விற்று அதில் சம்பாதித்த அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு 12 வங்கி கணக்குகள் இருப்பதை கண்டுபிடித்துள்ள போலீசார், அதனை முடக்குவதற்கான நடவடிக்கையும் எடுத்துள்ளனர்.
கைதானவர்களில் மகாவிஷ்ணு என்பவர் கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் விஜயலட்சுமியின் மகன் ஆவார்.
கைதானவர்களிடம் இருந்து போலீசார் 24.40 கிராம் எம்.டி.எம்.ஏ. என்ற உயர் ரக போதைப்பொருள், 12.47 கிராம் எம்.டி.எம்.ஏ. பவுடர், 92.43 கிராம் கொகைன், 1.620 கிலோ கிரீன் கஞ்சா, 1 கிலோ 16 கிராம் உலர்ந்த கஞ்சா மற்றும் ரூ.25 லட்சம் ரொக்கப்பணம், பணம் எண்ணும் எந்திரம், போதை பொருள் எடை பார்க்கும் எந்திரம், பீர் பாட்டில்கள், 3 கார்கள், 12 செல்போன்கள் என ரூ.70 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.