ரூ.200 கோடி இழப்பு: கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் - லாரி உரிமையாளர்கள் அதிரடி
- கியாஸ் தட்டுபாடு ஏற்படும்.
- பாட்டலிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் ஏற்றி செல்லப்படும் பணிகள் பாதிப்பு.
சேலம்:
தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.
மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணை நிறுவனங்களின் கிடங்குகளில் இருந்து 5 ஆயிரம் டேங்கர் லாரிகள் மூலம் லோடு ஏற்றி ஒப்பந்த அடிப்படையில் 6 மாநிலங்களில் உள்ள கியாஸ் பாட்டிலிங் பிளாண்டுகளுக்கு கியாசை எடுத்து வரும் பணியை சங்க உறுப்பினர்களின் லாரிகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய ஒப்பந்த விதிகளில் 2 அச்சு லாரிகளை பயன்படுத்த கூடாது, 3 அச்சு லாரிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாற்று ஓட்டுனர் இல்லாத பட்சத்தில் ரூ.20 ஆயிரம் அபராதம் வதிக்கப்படும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளால் டேங்கர் லாரிகளை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று காலை முதல் கால வரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.
இதனால் எண்ணை நிறுவன கிடங்குகளில் இருந்து பாட்டலிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் ஏற்றி செல்லப்படும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இதனால் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து நேற்று டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தி னருடன் எண்ைண நிறுவன அதிகாரிகள் கோவையில் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என கியாஸ் டேங்கர் லாரி உரிமை யாளர்கள் அறிவித்து ள்ளனர். அதன் படி 2-வது நாளாக இன்றும் கியாஸ் டேங்கர் லாரி உரிமை யாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் .
இது குறித்து தென் மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறிய தாவது-
ஆயில் நிறுவன அதிகாரிகளுடனான பேச்சு வார்த்தையில் எந்த வித உடன்பாடும் ஏற்படாததால் தென் மண்டலத்தில் கியாஸ் டேங்கர் லாரிகள் போராட்டத்தில் ஈடுப ட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள கியாஸ் டேங்கர் லாரிகளும் இந்த போராட்டத்தில் ஈடு பட முன் வந்துள்ளன. ஆனாலும் இன்னும் ஒரு வாரங்களுக்கு கியாஸ் தட்டப்பாடு வராது. அதன் பின்னர் கியாஸ் தட்டுபாடு ஏற்படும்.
தென் மண்டலத்தில் 5 ஆயிரம் கியாஸ் டேங்கர் லாரிகள் ஓடினாலும், 3 ஷிப்டுகளாக அந்த லாரிகள் பிரிக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 1500-க்கும் மேற்பட்ட லாரிகளில் கியாஸ் நிரப்பி பாட்டலிங் பிளாண்டுகளுக்கு கொண்டு வரப்படுவது வழக்கம்.
அந்த பணிகள் முற்றிலும் தற்போது முடங்கி உள்ளதால் நாள் ஒன்றுக்கு 18 லட்சம் சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் பணி பாதிக்க ப்பட்டுள்ள நிலையில் 2 நாட்களில் மட்டும் 36 லட்சம் கியாஸ் சிலிண்டர்க ளில் கியாஸ் நிரப்பும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஒரு டேங்கர் லாரியில் 18 ஆயிரம் கிலோ கியாஸ் நிரப்பப்பட்டு கொண்டு செல்லப்படும். அதன் மூலம் 1200 சிலிண்டர்கள் நிரப்பபடும். கடந்த 2 நாட்களில் 3 ஆயிரம் டேங்கர் லாரிகள் இயங்காததால் 36 லட்சம் சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் பணி தடை ஏற்பட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்தத்தால் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 200 கோடி ரூபாய் வீதம் 2 நாட்களில் 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோரிடம் எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக விரைவில் முறையிட உள்ளோம்.
மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்றால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக இது வரை எந்த தகவலும் இல்லை.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும். அதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினார்.