மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரெயில் பாதை பணிகளுக்காக ரூ.300 கோடிக்கு ஒப்பந்தம்
- அனைத்து வகை பணிகளுக்கும் ரூ.299 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் லார்சன் அண்ட் டூப்ரோ என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
- சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் அசோக்குமார், கூடுதல் பொதுமேலாளர் குருநாத் ரெட்டி, பொது ஆலோசகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் (2-ம் கட்டம்) 3-வது வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரையிலான சுரங்கப்பாதை மற்றும் உயர்மட்ட பகுதியில் பாதைகள் அமைத்தல், நிறுவுதல், சோதனை செய்தல் மற்றும் அதுதொடர்பான அனைத்து வகை பணிகளுக்கும் ரூ.299 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் லார்சன் அண்ட் டூப்ரோ என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட திட்டத்துக்காக ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதி உதவியாகும். மேலும் 2-ம் கட்ட திட்டத்துக்கான கடைசி டிராக் ஒப்பந்தமும் ஆகும்.
இதற்கான ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பாக திட்ட இயக்குனர் அர்ச்சுணன், லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் சார்பில், மெட்ரோ வணிக பிரிவின் துணைத்தலைவர் சுனில் கட்டாய் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் (தடங்கள் மற்றும் உயர்நிலை கட்டுமானம்) அசோக்குமார், கூடுதல் பொதுமேலாளர் (ஒப்பந்த கொள்முதல்) குருநாத் ரெட்டி, பொது ஆலோசகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.