உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூரில் சாரை சாரையாக குவியும் பாதயாத்திரை பக்தர்கள்

Published On 2025-01-12 11:53 IST   |   Update On 2025-01-12 11:53:00 IST
  • அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும் சாமி தரிசனம்.
  • பக்தர்கள் சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம்.

திருச்செந்தூர்:

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

ஆண்டுதோறும் தைப்பொங்கலை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து அலகு குத்தியும்,காவடி எடுத்து வந்தும், சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.


அந்த வகையில் நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் சாலையில் சாரை, சாரையாக காவடி எடுத்தும், சுமார் 10 அடி, 12 அடி நீள அலகு குத்தி வந்தவாறு உள்ளனர்.

தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

பக்தர்கள் வருகை அதிகரிப்பால் திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரு புறம் சாரை சாரையாக பக்தர்கள், மறுபுறம் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணி வகுத்ததால் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன.


இன்று (ஞாயிற்றுக் கிழமை) விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

மார்கழி மாதத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

Tags:    

Similar News