குன்னூரில் விடிய, விடிய சாரல் மழை- கடும் குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- தேயிலை தோட்டங்களில் பணியாற்றியவர்கள் பிளாஸ்டிக் கவர் அணிந்தபடியே தங்கள் வேலையில் ஈடுபட்டனர்.
- சாரல் மழையுடன் கடும் குளிரும் காணப்பட்டது.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரம் பரவலாக மழை பெய்தது. அதனை தொடர்ந்து சில நாட்கள் மழை குறைந்து இருந்தது.
மழை குறைந்தாலும் கடும் நீர்பனியும், மேகமூட்டமும் காணப்பட்டது. பகல் நேரங்களிலேயே கடுமையான பனிமூட்டமாக இருந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் மீண்டும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வண்ணாரபேட்டை, வண்டிச்சோலை, ஆழ்வார்பேட்டை, அட்டடி, பர்லியார், அருவங்காடு உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
விட்டு, விட்டு மழை தூறல் போட்டு கொண்டே இருந்தது. இன்று காலையும் சாரல் மழை தொடர்ந்தது. இதனால் அதிகாலையில் வேலைக்கு செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். அவர்கள் குடைகளை பிடித்தபடி சென்றனர்.
தேயிலை தோட்டங்களில் பணியாற்றியவர்கள் பிளாஸ்டிக் கவர் அணிந்தபடியே தங்கள் வேலையில் ஈடுபட்டனர். சாரல் மழையுடன் கடும் குளிரும் காணப்பட்டது. குளிரில் இருந்து தப்பிக்க ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்தனர்.
இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் நாளை முதல் 2 நாட்கள் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
குன்னூரில் வருவாய் துறை சார்பில் பேரிடர் மீட்பு குழுவினர், புயல் நிவாரணக்கூடங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளது. மேலும் தீயணைப்பு, நெடுஞ்சாலை, வனத்துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உரிய உபகரணங்களுடன் தயாராக உள்ளனர்.
இந்த நிலையில் குன்னூர் நகராட்சி கமிஷனர் இளம்வழுதி ஒலிபெருக்கி மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், மாவட்டத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் தாழ்வான இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக நகராட்சி சார்பில் பாரதியார் மண்டபம், காந்திபுரம், டென்ட் ஹில், வண்ணாரப்பேட்டை, அட்டடி, வண்டிச்சோலை, ஆழ்வார்பேட்டை ஆகிய பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கு சென்று தங்கி கொள்ளலாம்.
முகாமில் தங்குபவர்களுக்கு உணவு, கம்பளி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.