ராணிப்பேட்டை சிப்காட் போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: ரவுடி கும்பல் அட்டகாசம்?
- 14 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுற்றுப்புறத்தில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட்டில், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை யொட்டி சிப்காட் போலீஸ் நிலையம் உள்ளது.
நேற்று நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 2 பேர் பைக்கில் வந்தனர். அவர்கள் சிப்காட் போலீஸ் நிலையத்தின் நுழைவு வாயிலில் உள்ள வரவேற்பாளர். பொதுமக்கள் அமரும் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி சென்றனர்.
கட்டிடப் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசியதால் குபீரென தீ பிடித்து கரும்புகை ஏற்பட்டது.
பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். ஓடிச்சென்று தண்ணீரை ஊற்றினர். தப்பியவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா மற்றும் போலீஸ் அதிகாரிகள் சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். உடனடியாக குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக தேடுதல் பணியில் ஈடுபட உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் பேரில் பழைய குற்றவாளிகளை பிடித்து சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதேபோல் போலீஸ் நிலையம் எதிரே சிப்காட் மெயின் பஜார் தெரு பகுதியில் உள்ள அரிசி கடையின் இரும்பு கதவின் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.
இந்த நிலையில் சிப்காட் போலீஸ் நிலையம் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அரிசி கடையின் மீதும் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாகவும் தனியாக போலீசார் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை சிப்காட் பகுதிகளில் கடைகளில் ரவுடி கும்பல் மாமூல் வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கும்பல் குறித்து வியாபாரிகள் சிலர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் ரவுடி கும்பலை சேர்ந்த சிலரை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிடித்து எச்சரிக்கை செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ரவுடி கும்பல் போலீஸ் நிலையம் மற்றும் அரிசி கடை மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக இதுவரை 14 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்களின் உறவினர்கள் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். இதனால் சிப்காட் போலீஸ் நிலைய பகுதி பரபரப்பாக காணப்பட்டது.