உள்ளூர் செய்திகள்

இந்திய தலைவர்கள் சொல்லி தான் பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை கொன்றார்கள்- சீமான்

Published On 2025-02-03 10:48 IST   |   Update On 2025-02-03 10:48:00 IST
  • ஈரோடு கிழக்கு தொகுதி புதுமாதிரி தேர்தலை சந்திக்கிறது.
  • நாங்கள் உதிரிகள் அல்ல. உறுதியானவர்கள்.

ஈரோடு:

ஈரோடு பெரியார் நகரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரி த்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இதுவரை எத்தனையோ தேர்தல்கள் நடந்து இருந்தாலும், ஈரோடு கிழக்கு தொகுதி புதுமாதிரி தேர்தலை சந்திக்கிறது.

ஆளுங்கட்சியான தி.மு.க. வும், எதிர்கட்சியான அ.தி.மு.க.வும் நாம் தமிழர் கட்சியை வீழ்த்த ஒன்றி ணைகின்றன. அ.தி.மு.க வாக்காளர்களுக்கு கூடுதல் தொகை கொடுத்து, நீங்கள் தி.மு.க.விற்கு ஓட்டு போடா விட்டாலும் பரவாயில்லை, நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து விடாதீர்கள் என்று கெஞ்சுகின்றனர்.

எங்களைக் கண்டு இவ்வ ளவு பயப்படுவார்கள் என்று நான் நினைக்க வில்லை. அ.தி.மு.க, பா.ஜ.க. வினர் சில உதிரிகளை வைத்து பெரியாரை விமர்சனம் செய்கின்றனர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். நாங்கள் உதிரிகள் அல்ல. உறுதியானவர்கள். நாங்கள் உறுதியாய் தனித்து தேர்தல் களத்தில் நிற்கிறோம்.

உதிரிகளை கூட்டணி சேர்த்து தி.மு.க நிற்கிறது. நாங்கள் பெரியரை விமர்சிக்கவோ, இழிவாகவோ பேசவில்லை. கடந்த 60 ஆண்டுகளாக பெரியார்தான் எங்கள் மொழியை, இனத்தை இழிவுபடுத்தியுள்ளார்.

என் கருத்துக்கு எதிர் கருத்து கூறாமல் அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். பெரியார் இல்லாமல் ஒன்றுமில்லை என்பது அவர்களின் கருத்து. பெரியாரால் ஒன்றுமில்லை என்பது எங்கள் கருத்து.

தமிழரான எங்களுக்கு திராவிடன் என பெயர் வைக்க வேண்டாம். எந்த நேரத்தில் எந்த ஆயுதத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை எதிரிதான் தீர்மானிக்கிறார்.

அதுபோல நான் இப்போது பெரியாரை விமர்சிக்கிறேன். சனாதனத்தை ஒழிப்பதாக சொன்ன துணை முதலமைச்சர் உதயநிதி, ஆதிதிராவிடர்களோடு அமர்ந்து உணவருந்துவதாக ஒரு விளம்பரம் வருகிறது. இதுதான் உண்மையான சனாதானம் என்பதை உணர்ந்து உங்களுக்கு கோபம் வந்தால் நீங்கள் தமிழர்கள். கோபம் வராவிட்டால் நீங்கள் திராவிடர்கள்.

தமிழக மீனவர்கள் சுடப்படும்போது, நான் இந்த நாட்டு மீனவர் இல்லையா என்று கேட்டால் அது தமிழ் தேசியம். கச்சதீவை கொடுத்தது தான் என்றால் திராவிடம். கச்சத்தீவை திரும்ப எடுப்போம் என்றால் தமிழ்தேசியம். தமிழை சனியன் என்று இழித்து பேசுவது திராவிடம். தமிழ் எங்களுக்கு உயிர், முகம், முகவரி, மூச்சு, பேச்சு என்று பேசுவது தமிழ்தேசியம்.

60 ஆண்டுகளாக இலவசங்களைக் கொடுத்து வாக்கை பறித்து மக்களின் அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்றாமல் ஏழையாய் வைத்திருப்பது திராவிடம்.

தனக்கான தேவைகளை தாங்களே நிறைவேற்றும் தற்சார்பு வாழ்க்கையைத் தருவது தமிழ் தேசியம். மதிப்புமிக்க வாக்குகளை விலைக்கு விற்கும் நாடும், மக்களும் உருப்படமாட்டார்கள்.

ஈரோடு கிழக்கு தொகு தியில் நடப்பது கடுமையான போர். இந்த போரில், எங்க ளுக்கு கை கொடுப்பது தமிழர்களின் கடமை. ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள். என் வீட்டைப்போல நாட்டை பார்த்துக் கொள்வோம். என் தாய் மண்ணை என்னை விட எவரும் நேசிக்க முடியாது.

என் மொழி, இனத்தின் மீது பெரியாருக்கு ஏன் வன்மம்? என் தாய்மொழி தமிழை சனியன் என்று சொன்ன சனியனை ஒழிக்க வேண்டும். வள்ளளார், வைகுந்தரை விட பெரியார் என்ன சீர்திருத்தம் செய்து விட்டார்? எல்லா எலியும் எழுந்து வந்து ஒரு புலிக்கு முன்னாள் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்.

தாய்ப்பால் போல் தாய்மொழிக் கல்வி அவசி யம் என்றார் காந்தி. உன் மொழியை உலகின் மூத்த மொழியை அசிங்கமாக பேசினால் விட முடியுமா? வீட்டுக்கு தகப்பனை, நாட்டுக்கு தலைவனை கடன் வாங்க முடியாது. என் வலி உணராதவன் எனக்கு தலைவனாக இருக்க முடியாது.

ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு எதிராக யார் வந்தாலும் எதிரிதான். தமிழை பழித்தவனை தாயே தடுத்தாலும் விட மாட்டேன். பெரியாரால் இந்த நிலத்தில் என்ன நடந்தது? சமூகநீதி, சாதி ஒழிப்பு, பெண்ணிய உரிமை இதெல்லாம் திராவிடத்தில் வெறும் சொல். தமிழ் தேசியத்தில் அது செயல்.

பிரபாகரனை தீவிரவாதி என்று சொன்னது திராவிடம். இலங்கையில் போரை நிறுத்தவும், பிரபாகரன் உள்ளிட்டவர்களைக் காப்பாற்றவும் அமெரிக்கா விரும்பியது. ஆனால், காங்கிரஸ் குடும்பமும், தமிழக தலைவர்களும் அதனை விரும்பவில்லை.

இலங்கை போரை விரைந்து முடிக்க அவர்கள் விரும்பினார்கள் என்று முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி சிவசங்கர மேனன் எழுதி இருக்கிறார்.

பிரபாகரன் இருப்பது இவர்களின் எதிர்கால அரசியலுக்கு ஆபத்தாக இருக்கும் என்று கருதினார்கள். 13 கோடி தமிழ் சொந்தம் இருக்கும்போது, இசைப்பிரியா, பாலச்சந்திரனுக்கு கொடிய நிகழ்வு நடந்தது. பிரபாகரன் மகன் ராணுவ கட்டுப்பாட்டில் இருப்பது தமிழக, இந்திய தலைவர்களுக்கு சொல்லப்பட்டது.

ஆனால், பிரபாகரன் குடும்பத்தில் ஒருவர் கூட இருக்கக்கூடாது என்று தகவல் சொல்லப்பட்டுள்ளது. அதனால் பாலச்சந்திரனைக் கொன்றார்கள். இதை மறந்து, கடந்து போக முடியுமா? இதற்கு காரணமானவர்களை வஞ்சம் வைத்து கருவருக்காமல் விடமாட்டேன்.

பேரரசுகள் சாம்ராஜ்யங்களே வீழ்ந்துள்ள போது உங்களை வீழ்த்துவது எம்மாத்திரம்? வீழ்ந்து விட்டதால் தான் இப்போது காசு கொடுத்து ஓட்டு கேட்கின்றனர். சாதி பார்க்காமல் நாம் தமிழர் கட்சியில் இணைந்துள்ளோம். ஈரோடு கிழக்கு மக்களுக்கு நான் யாருக்காக பேசுகிறேன் என்று தெரியும்.

உதட்டில் இருந்து அல்ல, உள்ளத்தில் இருந்து பேசுகிறேன். உண்மையை, உரக்கப் பேசுவோம். உறுதியாக பேசு வோம். சத்தியத்தை சத்தமாக பேசுவோம். என்னை தோற்கடிக்க துடிக்கிறது திராவிடம். நான் வீழ்வது மகிழ்ச்சி என்றால் தி.மு.க. விற்கு வாக்களியுங்கள்.

வீழ்ந்த தமிழினம் எழ வேண்டுமானால், தன்மானத்தோடு மக்கள் வாழ வேண்டுமானால் எங்களுக்கு வாக்களியுங்கள். கட்சிகளை, தலைவர்களை நம்பியது போதும். ஒருமுறை எங்களை நம்புங்கள். எங்களின் வெற்றி தமிழ் பேரினத்தின் வெற்றி. மக்களின் வெற்றி. அரசியல் புரட்சிக்கான வெற்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News