உள்ளூர் செய்திகள்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தேரோட்டம்: அம்மன் தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர்

Published On 2025-01-12 11:37 IST   |   Update On 2025-01-12 11:37:00 IST
  • 3 தேர்களும் 4 ரத வீதிகள் வழியாக இழுத்து வரப்பட்டது.
  • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.

நாகர்கோவில்:

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3-ம் திருவிழா அன்று மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியும், 5-ம் திருவிழா அன்று கருட தரிசன நிகழ்ச்சியும் நடந்தது.

விழாவையொட்டி தினமும் காலை, மாலை சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெற்றது. 9-ம் திருவிழாவான இன்று காலையில் கங்காளநாதர் பிட்சாடனராக திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து கோவிலில் தட்டு வாகனத்தில் சுவாமியும், அம்பாளும், அறம் வளர்த்தநாயகியும், விநாயகரும் எடுத்து வரப்பட்டனர்.

பின்னர் பெரிய தேரான சுவாமி தேரில் சுவாமியும், அம்பாளும் அம்மன் தேரில் அறம் வளர்த்த நாயகி அம்மனும், பிள்ளையார் தேரில் விநாயகரும் எழுந்தருளினார்கள். இதைத்தொடர்ந்து தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து தேர் சக்கரத்தில் தேங்காய் உடைக்கப்பட்டது. பின்னர் 3 தேர்களும் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. விழாவில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசியா, சுவாமி பத்மேந்திரா, காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சுகுமாரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்மன் தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். 3 தேர்களும் 4 ரத வீதிகள் வழியாக இழுத்து வரப்பட்டது. 'ஓம் காளி ஜெய் காளி' என்ற பக்தி கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

தேரோட்ட விழாவில் புதுமண தம்பதியினர் பலரும் கலந்து கொண்டனர். தேரோட்டத்தையொட்டி குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குடும்பத்தோடு வந்து தேரோட்ட விழாவில் பலரும் கலந்து கொண்டனர். வெளி மாவட்டங்களில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோரும் தேரோட்ட விழாவில் பங்கேற்றனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருந்தனர். 4 ரத வீதிகளிலும் பக்தர்கள் தலையாகவே காட்சி அளித்தது. இதையடுத்து கோவில் 4 ரத வீதிகளிலும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந்தது. சாலை ஓரங்களில் பக்தர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு தேரேட்டத்தை காண வந்திருந்தனர். சுசீந்திரம் புறவழிச்சாலையிலும் ஏராளமான வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

நாகர்கோவிலில் இருந்து சுசீந்திரத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. சுசீந்திரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்களுக்கு குளிர்பானங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இன்று இரவு 12 மணிக்கு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் விடைபெறும் சப்த வர்ண நிகழ்ச்சி நடக்கிறது.

10-ம் திருவிழாவான நாளை (13-ந்தேதி) காலை 10 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. மாலையில் நடராஜர் வீதி உலாவும், இரவில் ஆராட்டும் நடக்கிறது.

Tags:    

Similar News