உள்ளூர் செய்திகள் (District)

கைது செய்யப்பட்ட பாலமுருகன்.

பண்ருட்டியில் 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்- பொம்மை வியாபாரி கைது

Published On 2023-05-13 05:38 GMT   |   Update On 2023-05-13 05:38 GMT
  • மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்கு பதிவு செய்து பொம்மை வியாபாரி பாலமுருகனை தேடி வந்தார்.
  • நிலுவையில் உள்ள பழைய வழக்குகளை தூசி தட்டி எடுத்து குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்து வரும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(32). இவன் ஏற்கனவே திருமணம் ஆனவர்.

இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி பிரிந்து வேறு ஒருவருடன் குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பாலமுருகன் ஊர் ஊராக சென்று திருவிழா கூட்டங்களில் பொம்மை விற்கும் தொழில்செய்து வந்தார்.

இவர் கடந்த ஆண்டு பண்ருட்டி அம்பேத்கர் நகரில் உள்ள உறவினர் வீட்டில் குழந்தைகளுடன் தங்கி வியாபாரம் செய்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும்13 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தியுள்ளார். பின்னர் சிறுமியை பழனிக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு சிறுமியை உளுந்தூர்பேட்டையில் விட்டு விட்டு தலைமறைவானார்.

இதுகுறித்து பண்ருட்டி மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர்கள் புகார் செய்தனர். மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்கு பதிவு செய்து பொம்மை வியாபாரி பாலமுருகனை தேடி வந்தார். நிலுவையில் உள்ள பழைய வழக்குகளை தூசி தட்டி எடுத்து குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்து வரும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் இந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

அவரது உத்தரவுபடி பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா சிறப்பு புலனாய்வு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். இதனைதொடர்ந்து டி.எஸ்.பி. குழு தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு தலைமையில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு, தனிப்படை போலீஸ்காரர்கள் ஆனந்த், ராஜி, கணேசமூர்த்தி ஆகியோருடன் தமிழகம் முழுவதும் ஊர் ஊராக சென்று திருவிழா கூட்டங்களில் வலை வீசி தேடினர். பாலமுருகனின் செல்போன் இந்தி வாலிபர் ஒருவரிடம் ரூ.800-க்கு விற்றது தெரிய வந்தது. வெறும் புகைப்பட ஆதாரத்துடன் சுற்றி வந்த தனிப்படை போலீசாருக்கு அவன் இருக்கும் இடம் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து பாலமுருகனை சுற்றி வளைத்து கைது செய்த தனிபடையினர் அவரை பண்ருட்டிக்கு அழைத்து வந்தனர். பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். 6 மாத காலமாக கிடப்பில் கிடந்த சிறுமி பாலியல் குற்றவாளியை அதிரடியாக கைது செய்த பண்ருட்டி போலீசாருக்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டு தெரிவித்தார்.

Tags:    

Similar News