உள்ளூர் செய்திகள்

மதுரை அ.தி.மு.க. மாநாட்டுக்கு பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

Published On 2023-08-04 11:19 GMT   |   Update On 2023-08-04 11:19 GMT
  • மாநாட்டுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் பணிகள் முழுவீச்சு நடைபெற்று வருகின்றன.
  • இரவு, பகலாக சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை:

மதுரையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டுக்கான பந்தல் அமைக்கும் பணி இரவு பகலாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து அ.தி.மு.க.வின் எழுச்சி மாநாடு மதுரையில் வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் தொண்டர்களை பங்கேற்க செய்ய அ.தி.மு.க. நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

மாநாட்டில் அதிக அளவில் தொண்டர்களை திரட்டும் வகையில் தீவிரமாக பணியாற்றும் படி மாவட்ட செயலாளர்களுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வழங்கி உள்ளார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் குறைந்தது 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களை பங்கேற்க செய்யும் வகையில் ஏற்பாடுகளை செய்ய மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு லட்சம் தொண்டர்களை மதுரை மாநாட்டிற்கு அழைத்து வர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் மதுரை மாநாட்டில் பங்கேற்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக மதுரை ரிங் ரோடு வலையன்குளம் சந்திப்பில் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் மாநாட்டு மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது. இங்கு பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதனை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் கண்காணித்து வருகிறார்கள். மேலும் தலைமை கழக நிர்வாகிகளும் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் உணவு வழங்குவது குறித்து சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உணவு வழங்குவதற்கான 10 ஆயிரம் நபர்களுக்கு ஒரு கவுண்டர் வீதம் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு உணவு பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் அமைக்கவும், நடமாடும் கழிப்பிட வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகளையும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் பணிகள் முழுவீச்சு நடைபெற்று வருகின்றன. இரவு, பகலாக சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்ற பிறகு முதல் முதலாக நடைபெறும் மாநாடு என்பதால் இந்த மாநாட்டை சிறப்பாகவும், எழுச்சியாகவும் நடத்தி காட்ட அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார்கள். மாநாட்டில் 20-ந்தேதி காலை எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கொடி ஏற்றி வைக்கிறார். மாலை 5 மணி அளவில் மாநாட்டு திடலில் சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டில் கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. மாநாட்டில் முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகிறது.

மாநாட்டுக்கு தொண்டர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு நான்கு பகுதிகளில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தொண்டர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளிக்கப்பட உள்ளது.

எனவே மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு தமிழக அரசியலில் அ.தி.மு.க.வின் செல்வாக்கை மேலும் உயர்த்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாகவும், இந்த மாநாடு வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்கு கட்டியம் கூறும் வகையில் அமையும் என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News