உள்ளூர் செய்திகள்

வனப்பகுதியில் மின்வேலி அமைப்பதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு வில்லுப்பாட்டு

Published On 2022-10-26 08:41 GMT   |   Update On 2022-10-26 08:41 GMT
  • நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
  • பெண்கள் உள்ளிட்டவர்கள் கோவில் கொடை விழாக்களில் அமர்ந்து வில்லிசை படிப்பது போல படித்துள்ளனர்.

நெல்லை:

நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

இந்த மலையின் அடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகளான கரடி, மிளா, மான், யானை உள்ளிட்டவை வராமல் தடுப்பதற்காகவும், மர்ம நபர்கள் விவசாய நிலங்களில் புகுந்து திருடுவதை தடுப்பதற்காகவும் சட்டத்திற்கு புறம்பாக சில இடங்களில் மின் வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த மின் வேலிகளால் பல இடங்களில் கரடி, காட்டுப்பன்றி, மயில், மான் போன்றவை சிக்கி பலியாகி உள்ளது. சில இடங்களில் மனிதர்களும் உயிரிழக்கும் சூழல் ஏற்படுகிறது.

மின் வேலி அமைப்பது சட்டப்படி குற்றமென்றும் , அதற்கான தண்டனை விபரம் பற்றி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நெல்லை மண்டல மின் பகிர்மான கழகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மின்வேலி அமைப்பதால் ஏற்படும் விளைவுகள், அதனை தடுப்பது சம்பந்தமாக வில்லுப்பாட்டு வாயிலாக விழிப்புணர்வு பாடலை பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். அதில் பெண்கள் உள்ளிட்டவர்கள் கோவில் கொடை விழாக்களில் அமர்ந்து வில்லிசை படிப்பது போல படித்துள்ளனர்.

இந்த விழிப்புணர்வு பாடலை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகிலுள்ள வடக்கு அழகுநாச்சியார்புரம் கிராமத்தை சேர்ந்த மாரியம்மாள் வில்லிசை குழுவினர் பாடியுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Similar News