உள்ளூர் செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீரை சிக்கராயபுரம் கல்குவாரியில் சேமிக்க திட்டம்

Published On 2023-10-29 14:28 IST   |   Update On 2023-10-29 14:29:00 IST
  • ரூ.34 கோடி செலவில் கால்வாய் அமைக்கும் பணி ஜனவரி மாதம் தொடங்கும்.
  • தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றனர்.

பூந்தமல்லி:

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடி ஆகும். தற்போது ஏரியில் 3,123 மில்லின் கனஅடி தண்ணீர் உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு மழைநீர் மற்றும் பூண்டிஏரியில் இருந்து வரும் கிருஷ்ணா தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் போது திறக்கப்படும் உபரி நீர் சிறுகளத்தூர், குன்றத்தூர், வழுதிளம்பேடு, திருநீர் மலை வழியாக அடையாறு ஆற்றில் வீணாக கலந்து வருகிறது.

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது மாங்காடு அருகே உள்ள சிக்கராயபுரத்தில் கைவிடப்பட்ட கல்குவாரிகளில் தேங்கிய தண்ணீர் சுத்திகரித்து குடிநீர் தேவைக்கு அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து கல்குவாரியில் தேங்கி இருக்கும் தண்ணீர் அனைத்தையும் சென்னை குடிநீர் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் போது தண்ணீர் வீணாக அடையாறு ஆற்றில் கலப்பதை தடுத்து அதனை கல்குவாரி குட்டையில் சேமிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்காக உபரிநீர் செல்லும் பாதையில் காவனூர் அருகில் இருந்து கல்குவாரிக்கு தனியாக கால்வாய் அமைக்கும் பணி ரூ. 34 கோடி செலவில் அமைய இருக்கிறது. இதற்கான டெண்டர் விரைவில் விடப்பட இருக்கிறது. இதன் பின்னர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் காவனூர் அருகே செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீரை சிக்கராயபுரம் கல்குவாரி பகுதிக்கு கொண்டு செல்ல சுமார் 2 கி.மீட்டர் தூரத்துக்கு கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்படும்.

கடந்த மாதம் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை(மொத்த உயரம் 24 அடி) தாண்டியதை அடுத்து ஏரியில் இருந்து 100 கனஅடி உபரி நீர் வீணாக அடையாறு ஆற்றில் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரை சிக்கராயபுரத்தில் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரிகளுக்கு கொண்டு செல்ல 2 கி.மீ., நீளத்துக்கு கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ரூ.34 கோடி செலவில் கால்வாய் அமைக்கும் பணி ஜனவரி மாதம் தொடங்கும். 250 கனஅடிதண்ணீரை கால்வாய் வழியாக சுமார் 20 நாட்களுக்கு அனுப்பினால் குவாரிகளில் 500 மில்லியன் கனஅடி சேமிக்க முடியும்.

ஏற்கனவே தண்ணீர் நிரம்பிய குவாரிகளில் இருந்து சென்னை மெட்ரோ வாட்டர் தினமும் சுமார் 10 மில்லியன் லிட்டர் நீரை குடிநீருக்கு எடுத்து வருகிறது. குவாரிகளில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல 3.5 கி.மீட்டர் நீளமுள்ள குழாய் சமீபத்தில் பதிக்கப்பட்டு உள்ளன.

செம்பரம்பாக்கம் உபரி நீர், கல்குவாரிக்கு திருப்பி விடப்படுவதால் வெள்ள பாதிப்பும் குறையும். தற்போது குவாரிகளில் 300 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புலிப்பாக்கம் மற்றும் கேளம்பாக்கம் பகுதியில் உள்ள குவாரிகளை குடிநீருக்கு பயன்படுத்து வதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து வருகிறோம். பம்மல் மற்றும் பல்லாவரம் பகுதியில் உள்ள குவாரிகளில் இருந்து பெறப்படும் தண்ணீர், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றனர்.

Tags:    

Similar News