பொன்னேரியில் கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல்- கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
- கல்லூரி மாணவர்கள் பொன்னேரி- தச்சூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
- டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி பஸ் நிலையத்தில் இருந்து பள்ளிபாளையம் நோக்கி (எண்டி.43) அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. இதில் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பயணம் செய்தனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் பஸ்படிக்கட்டில் நின்றதாக தெரிகிறது. கிருஷ்ணாபுரம் அருகே சென்ற போது டிரைவர் பஸ்சை நடுவழியில் நிறுத்தி மாணவர்களை கண்டித்தார். மேலும் பஸ்சை இயக்க மறுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவர்கள் பொன்னேரி- தச்சூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். மேலும் டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அவ்வழியே காரில் வந்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகர் மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். முறையாக பஸ்களை இயக்க பணிமனை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதைத்தொடர்ந்து பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.