வேளச்சேரியில் குப்பைகளை அகற்றியபோது மின்சாரம் தாக்கி துப்புரவு ஊழியர் பலி
- ஆதம்பாக்கம், மேற்கு கரிகாலன் தெருவில் மின் இணைப்பு பெட்டி உள்ளது. இதன் அருகே 2 டாஸ்மாக் பார்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன.
- நேற்று இரவு 8 மணி அளவில் மழை பெய்து கொண்டு இருந்தபோது மின் இணைப்பு பெட்டி அருகே சென்ற மாடு ஒன்று திடீரென மின்சாரம் தாக்கி இறந்தது.
வேளச்சேரி:
பள்ளிக்கரணையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது50). மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு ஊழியராக பணியாற்றி வந்தார்.
இன்று காலை அவர் வழக்கம் போல் வேளச்சேரி, வெங்கடேஸ்வரா நகர், 3-வது மெயின் ரோடு பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது அங்குள்ள குப்பை தொட்டி அருகே தரையில் சரிவர புதைக்கப்படாமல் இருந்த மின் கம்பியில் இருந்து மின்கசிவு ஏற்பட்டது. இதனை கவனிக்காமல் சேகர் அதன் மீது கால் வைத்து குப்பைகளை அகற்ற முயன்றார்.
இதில் மின்சாரம் தாக்கியதில் சேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின் வயர்கள் சரி செய்யப்பட்டது.
நேற்று இரவு அப்பகுதியில் பரவலாக மழை பெய்து இருந்தது. மழை நீரின் ஈரத்தால் சரியாக புதைக்கப்படாத மின் கம்பியில் இருந்து கசிந்த மின்சாரம் தொழிலாளி சேகரின் உயிரை பறித்து விட்டது.
பருவமழை தொடங்குவதற்கு முன்பு இதே போல் ஆபத்தாக உள்ள மின் வயர்களை சரி செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஆதம்பாக்கம், மேற்கு கரிகாலன் தெருவில் மின் இணைப்பு பெட்டி உள்ளது. இதன் அருகே 2 டாஸ்மாக் பார்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன. நேற்று இரவு 8 மணி அளவில் மழை பெய்து கொண்டு இருந்தபோது மின் இணைப்பு பெட்டி அருகே சென்ற மாடு ஒன்று திடீரென மின்சாரம் தாக்கி இறந்தது. இதனை பார்த்து அவ்வழியே சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மின் ஊழியர்கள் விரைந்து வந்து மின்சாரத்தை துண்டித்து மின்கசிவை சரிசெய்தனர். மின்சாரம் தாக்கி இறந்த மாடு சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. மின்இணைப்பு பெட்டி அருகே தரையில் இருந்து வெளியே தெரியும் வகையில் உள்ள மின் வயர்களை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.