ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
- காவிரி ஆற்றிற்கு வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- போலீசார், வருவாய்த்துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழைக்கு ஏற்ப ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் காலையில் வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக இருந்தது.
இதனால் அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடைவிதித்து இருந்தது. இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததன் எதிரொலியாக, ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து குறைந்தது.
காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்தது. இருப்பினும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதுடன், காவிரி ஆற்றில் பாய்ந்து ஓடுகிறது. காவிரி ஆற்றிற்கு வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக உள்ளதால் அருவிகள் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்க தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி அனுமதி வழங்கி உள்ளார். மேலும் போலீசார், வருவாய்த்துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.