தமிழ்நாடு

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதா? விஜய்க்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்

Published On 2024-12-30 07:27 GMT   |   Update On 2024-12-30 07:27 GMT
  • பொள்ளாச்சி சம்பவம் ஒன்று போதும், அவர்கள் ஆட்சி காலத்தில் எப்படி இருந்தது என்று.
  • அண்ணா பல்கலைக்கழக வழக்கை சி.பி.ஐ.க்.கு மாற்ற தேவை இல்லை என்று நீதிமன்றமே கூறிவிட்டது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை கலைஞர் அரசு மகளிர் கல்லூரியில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்க தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. போராட்டம் என்பது எள்ளி நகைக்க கூடிய ஒன்று. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் பொள்ளாச்சி சம்பவம் நடைபெற்றது. அப்போது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்று அடங்காப் பிடாரித்தனமாக மறுத்தவர்கள் அவர்கள். கடைசியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி நாங்கள் அன்று நடவடிக்கை எடுக்க வைத்தோம்.

இன்று நாங்கள் நடவடிக்கை எடுத்து உள்ளோம். யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. இப்பொழுது அ.தி.மு.க. போராட்டம் என்பதெல்லாம் வீண் வேஷம். நாங்கள் இருக்கிறோம் என்று காண்பித்து கொள்வதற்காக அ.தி.மு.க.வினர் இப்படி கபட நாடகத்தை நாடுகிறார்கள்.

பொள்ளாச்சி சம்பவம் ஒன்று போதும், அவர்கள் ஆட்சி காலத்தில் எப்படி இருந்தது என்று.

அண்ணா பல்கலைக்கழக வழக்கை சி.பி.ஐ.க்.கு மாற்ற தேவை இல்லை என்று நீதிமன்றமே கூறிவிட்டது. இந்த வழக்கில் எப்.ஐ.ஆர் கசிந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தி.மு.க. ஆட்சியில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. பெண்கள் வெளியே வருகிறார்கள். மகாத்மா காந்தி நடு இரவில் ஒரு பெண் தங்க நகைகளை அணிந்து கொண்டு சுதந்திரமாக நடமாடி சென்று பத்திரமாக வீடு திரும்பிகின்ற பொழுது சுதந்திரம் என்று தெரிவித்திருந்தார்.

அது இந்தியாவிலேயே கடைப்பிடிக்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மற்ற மாநிலத்திற்கு எல்லாம் சென்று பார்த்துவிட்டு வரட்டும்.

நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொல்லுகின்ற விஜய்க்கு இதைத்தான் பதிலாக சொல்கின்றோம். தயவுசெய்து வெளியே சென்று பாருங்கள். எங்கடா காலையில் பிணம் விழும் என்று பிணம் கொத்தி கழுகு என்று நினைப்பதை போல, எந்த பிணமாவது விழுந்தால் அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடலாமா என்று பார்க்கின்ற பரிதாபகரமான நிலையில் அண்ணாமலை உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது உடன் எம்.பி.க்கள் எம்.எம்.அப்துல்லா, நவாஸ் கனி, எம்.எல்.ஏ.க்கள் முத்துராஜா, சின்னதுரை, துணை மேயர் லியகத்அலி உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News