தமிழக பா.ஜ.க. தலைவராக மீண்டும் தேர்வாகிறார் அண்ணாமலை
- அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டி உள்ளது.
- அ.தி.மு.க.வுடன் இணக்கமாக செல்பவர்களை நியமிக்கலாமா என்றும் ஆலோசிக்கப்படுகிறது.
சென்னை:
நாடு முழுவதும் பா.ஜ.க உட்கட்சித் தேர்தல் நடந்து வருகிறது. அதன்படி தமிழகத்திலும் கிளைகள் முதல் மாவட்டம் வரை நிர்வாகிகள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக வருகிற 15-ந் தேதிக்குள் புதிய மாநில தலைவரை தேர்வு செய்ய வேண்டும். அதற்கான பணிகள் தொடங்கி உள்ளது.
தற்போதைய தலைவர் அண்ணாமலை பதவிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. ஒருவர் தலைவர் பதவியில் இருமுறை இருக்கலாம். அந்த வகையில் மீண்டும் அண்ணாமலைக்கே வாய்ப்பு வழங்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது.
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டி உள்ளது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமையாமல் போனதற்கு அண்ணாமலை தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. எனவே அ.தி.மு.க.வுடன் இணக்கமாக செல்பவர்களை நியமிக்கலாமா என்றும் ஆலோசிக்கப்படுகிறது. அதன்படி டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பெயரும் பரிசீலிக்கப்படுவதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அகில இந்திய தலைவர் நட்டாவின் பதவிக்காலம் முடிவடைகிறது. புதிய தேசிய தலைவரையும் வருகிற 20-ந் தேதிக்குள் தேர்வு செய்யப்பட வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் மாநில தலைவர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட பிறகு மாநில தலைவர்கள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து புதிய தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பார்கள்.