மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசே நடத்தக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
- மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் பணப் பலன்களை வழங்க வேண்டும்,.
- உயர்நீதிமன்ற உத்தரவு எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி மேல்முறையீடு செய்திருந்தார்.
மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை நிர்வகித்து வந்த பாம்பே பர்மா நிறுவனத்தின் ஒப்பந்த காலம் வருகிற 2028-ம் ஆண்டுடன் முடிவடைய உள்ளதால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேயிலை நிர்வாகம் சார்பில் விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசே ஏற்று நடத்த உத்தரவிட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி உட்பட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை கடந்தாண்டு டிசம்பர் 3 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசு ஏற்று நடத்தக்கோரிய அனைத்து வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் பணப் பலன்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவு எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்நிலையில், மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தக் கோரிய கிருஷ்ணசாமியின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.