யார் அந்த சார்? - திருமாவளவன் வீடியோவை பகிர்ந்து அதிமுக கேள்வி
- யார் அந்த சார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்படவேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
- திருமாவளவன் பேசிய இந்த வீடியோவை பகிர்ந்து அதிமுக கட்சியின் ஐடி விங் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைதான ஞானசேகரன் சம்பவத்தன்று 'சார்' என்று குறிப்பிட்டு பேசியதாக கூறப்படுகிறது. இதனால் யார் அந்த சார்? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு அப்படி யாரும் இல்லை, மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்வதாக தி.மு.க. அமைச்சர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், யார் அந்த சார்? என்பது தொடர்பாக நேர்மையான விசாரணை நடத்தப்படவேண்டும் என விசிக தலைவர் திருமாவளவனும் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், "அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் யார் அந்த சார்? என்று நேர்மையான விசாரணை தேவை. பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல் உள்நோக்கமின்றி போராட வேண்டும். பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட யாராக இருந்தாலும் கடும் தண்டனை தரப்பட வேண்டும். விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளின் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த அனுமதி தரப்பட வேண்டும். பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளியை சிறையில் வைத்தே புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும். கைதிக்கு உடனே ஜாமின் வழங்க கூடாது" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து திருமாவளவன் பேசிய இந்த வீடியோவை பகிர்ந்து அதிமுக கட்சியின் ஐடி விங் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அந்த பதிவில், "யார் அந்தSIR என்ற சந்தேகம் இருப்பதால் நேர்மையான விசாரணை தேவை என்று கோரியுள்ளார் விசிக தலைவர் திருமாவளவன். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் யார் அந்த SIR என்ற கேள்வி ஒலிக்கும்" என்று பதிவிடப்பட்டுள்ளது.