தேர்தலில் வாக்களிக்ககோரி மூத்த வாக்காளர்களுக்கு சீர்வரிசை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிகாரிகள்
- நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலின் போது 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
- ஒரு கட்டமாக மூத்த வாக்காளர்களின் இல்லம் தேடி வாக்களிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறி அவர்களுக்கு அழைப்பிதழும் வழங்கப்பட்டன.
நெல்லை:
வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களித்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தேர்தல் ஆணையம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வயதில் மூத்த வாக்காளர்களை வீடு தேடி சென்று அழைப்பிதழ் கொடுத்து 12-டி படிவத்தை கொடுத்து வாக்களித்திட அழைக்கும் நிகழ்ச்சி இன்று நெல்லை மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இதில் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் விசுவாசம் என்ற 87 வயது முதியவர் வீட்டிற்கு நெல்லை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் மற்றும் தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பு அதிகாரி கிஷன் குமார் தலைமையில் அலுவலர்கள் சீர்வரிசையுடன் பழங்கள் மற்றும் வெற்றிலை பாக்கு சகிதம் அழைப்பிதழ் மற்றும் மேளதாளத்துடன் நேரில் சென்று வழங்கி விசுவாசம் என்பவரை வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அவரிடம் வாக்களிக்க வேண்டிய 12-டி விண்ணப்ப படிவத்தையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பு அதிகாரி கிஷன் குமார் கூறியதாவது:-
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலின் போது 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு கட்டமாக மூத்த வாக்காளர்களின் இல்லம் தேடி வாக்களிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறி அவர்களுக்கு அழைப்பிதழும் வழங்கப்பட்டன.
மேலும் அவர்கள் தேர்தல் வாக்களிக்கும் நாளில் வர முடியாத சூழ்நிலை இருந்தால் அவர்களுக்கு 12டி என்ற விண்ணப்ப படிவத்தையும் வழங்கினர்
மேலும் குறைவான வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வீடுகள் தோறும் விழிப்புணர்வு பிரசாரங்களையும் வருகிற ஏப்ரல் 13-ந்தேதி பாளையங்கோட்டை மேடை போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு தேர்தல் திருவிழா நடைபெற உள்ளது. இதில் நமது பாரம்பரிய விளையாட்டுக்கள், நடனங்கள் ஆகியவற்றுடன் ஒரு தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற உள்ளது.
மேலும் முதல் வாக்காளர்களை கவரும் விதமாக புதிய தொழில்நுட்பத்தில் டிரோன்கள் மூலமும் விழிப்புணர்வு பிரசாரம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.