உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு பழங்கால பொருட்கள் சிறப்பு கண்காட்சி: 20- ந்தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்

Published On 2022-07-18 15:07 IST   |   Update On 2022-07-18 15:07:00 IST
  • கலைவாணர் அரங்கில் முதல் மாடியில் தொல்லியல் துறை மற்றும் நில அளவைத் துறை சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.
  • தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

சென்னை:

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தமிழ்நாடு தினத்தையொட்டி பழங்கால பொருட்கள் கண்காட்சி நடந்தது.

தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 (1967) -ம் நாளையே தமிழ்நாடு திருநாளாக கொண்டாடப்படும் என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதையொட்டி இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்பட்டது.

கலைவாணர் அரங்கில் முதல் மாடியில் தொல்லியல் துறை மற்றும் நில அளவைத் துறை சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். பின்னர் கண்காட்சி அரங்குகள் முழுவதையும் சுற்றி பார்வையிட்டனர்.

தமிழ்நாடு பற்றிய அறிய வரலாறுகள், பழங்கால பொருட்கள் காட்சி படுத்தப்பட்டன.

தமிழர்களின் பழங்கால நாகரிகம் வரலாறு தொடர்பான கலை பொருட்கள் ஏராளமாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. பழங்கால தமிழர்கள் உபயோகப்படுத்திய மண்பானைகள், கைவினைப் பொருட்கள், பழங்கால மண்பாண்டங்கள், அழகு சாதன பொருட்கள், பழங்கால ஆயுதங்கள் ஆகியவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

தொல்லியல் துறை சார்பாக நடந்த இந்த கண்காட்சியில் சிவகளை, அரியவகை தொல் பொருட்களும், கீழடி, ஆதிச்சநல்லூர், மயிலாடும்பாறை, கொடுமணல் ஆகிய இடங்களில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

மேலும், தமிழ்நாடு நில அளவைத்துறை சார்பில் சென்னை மாகாணத்தின் பழைய மற்றும் தற்போது வரையிலான ஆவணங்கள் மற்றும் வரைபடங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. கண்காட்சியை வருகின்ற 20-ந்தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.

Tags:    

Similar News